தலைமுடியில் கின்னஸ் சாதனை… அசத்தும் நம்ம ஊரு பெண்!!!
- IndiaGlitz, [Saturday,November 07 2020]
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது சிறுமி கின்னஸ் சாதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவர் செய்த சாதனை என்னவென்றால் தனது தலைமுடியை மிக நீளமாக வளர்த்து அதைப் பராமரித்ததுதான். பொதுவா இந்தியா, சீனா போன்ற நாடுகளில் சிகை அலங்காரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அப்படி கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒவ்வொரு பெண்களுக்கும் இருக்க வேண்டிய கடமையாகவே கருதப்படுகிறது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நிலன்ஷீ படேல் என்பவர் தன்னுடைய சிறிய வயதில் சிகை அலங்காரம் செய்து கொள்வதற்காக கடைக்குச் சென்றாராம். அப்படி சென்றபோது ஏற்பட்ட மோசமான அனுபவத்தைத் தொடர்ந்து இனிமேல் தனது வாழ்நாளில் முடியே வெட்டக்கூடாது என முடிவெடுத்து இருக்கிறார். அந்த முடிவுதான் இன்றைக்கு கின்னஸ் சாதனை விருதைப் பெற்றுத் தந்திருக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த பிரபல தொலைக்காட்சி தொடரான தி நைட் ஆப் ரெக்கார்ட் நிகழ்ச்சியிலும் நிலன்ஷீ கலந்து கொண்டிருக்கிறார். அந்நேரத்தில் அவருடைய தலைமுடி 170.5 செ.மீ (5 அடி 7 அலங்குலம்) இருந்திருக்கிறது. அந்த அளவைவிட தற்போது அதிகமாக வளர்ந்து 2 மீட்டராக அதிகரித்ததால் இந்த ஆண்டு கின்னஸ் சாதனை விருதுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த நிலன்ஷீ, கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்றெல்லாம் நான் நினைக்கவே இல்லை. ஆனால் இப்படி உலகச் சாதனை போட்டிகளில் கலந்து கொள்ளும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தச் சாதனையை புரிய வேண்டுமென்றால் நமது தலைமுடிக்கு அதிக அக்கறை காட்ட வேண்டும். மேலும் கின்னஸ் குழு உங்களது முடியை ஈரமாக வைத்தே அளவிடுவார்கள். அப்போது சரியான அளவீட்டைப் பெற முடியும் என்று தெரிவித்து இருக்கிறார்.