ஒமைக்ரான் பாதிப்பு… தமிழகத்தில் 18 பேர் வீடு திரும்பியதாகத் தகவல்!
- IndiaGlitz, [Monday,December 27 2021]
உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பால் தமிழகத்தில் 34 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அதில் தற்போது 18 பேர் உடல்நலம்பெற்று வீடு திரும்பியுள்ளதாகச் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் முன்னதாக நைஜீரியாவில் இருந்து வந்த நபர் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு திரும்பிய 104 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவர்களில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் அறிகுறியே இல்லாத அவர்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது 18 பேர் வீடு திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களைத்தவிர S ஜீன் உள்ள கொரோனா நோயாளிகள் மற்றும் பிற கொரோனா நோயாளிகள் அனைவரும் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் இந்தியா முழுக்க 578 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா நோய்ப் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்தியச் சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டு உள்ளது.
மேலும் டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் நேற்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து உத்திரப்பிரதேச மாநிலம், கோவா, பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் அண்மையில் சட்டச்சபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா பதிப்பு அதிகரித்து வருவதால் இது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் மத்தியச் சுகாதார அமைப்புடன் இணைந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.