சொந்த ஊரை நோக்கி நடந்து சென்ற தொழிலாளர்கள் மீது மோதிய ரயில்: 17 பேர் பரிதாப பலி
- IndiaGlitz, [Friday,May 08 2020]
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த சுமார் இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து, நாடு முழுவதும் எந்த போக்குவரத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக நடந்தே ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் செல்கின்றனர். இவ்வாறு நடந்து செல்லும்போது வெயிலின் தாக்கம் தாங்காமலும், உடல்நலக் குறைவாலும் ஒரு சிலர் உயிரிழந்தனர் என்பது சோகமான சம்பவங்களாக இருந்தது
இந்த நிலையில் அவுரங்காபாத் அருகே வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது அதிகாலை நேரத்தில் சோர்வு காரணமாக ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கியதாக தெரிகிறது. அப்போது அதிகாலை 4 மணிக்கு அந்த பக்கமாக வந்த சரக்கு ரயில், தண்டவாளத்தில் படுத்து இருந்த தொழிலாளர்கள் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகியுள்ளது
சொந்த ஊரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ரயில் மோதி 17 உயிர்கள் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.