இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்வு!

சீனா, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் கொரோனா வைரசால் பலியாகி வரும் நிலையில் இந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் அதே நேரத்தில் தினமும் கொரோனாவால் உயிர் பலியாவதை மட்டும் தடுக்க முடியவில்லை.

தற்போது வரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 640 பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 67 பேர் குணமாகி வீடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா உள்ளது. அம்மாநிலத்தில் மட்டும் 137 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மகாராஷ்டிராவில் 130 பேர்களும், கர்நாடகாவில் 55 பேர்களும், தெலுங்கானாவில் 45 பேர்களும் குஜராத்தில் 43 பேர்களும், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 43 பேர்களும் உத்தரப்பிரதேசத்தில் 42 பேர்களும், டெல்லியில் 36 பேர்களும், பஞ்சாபில் 33 பேர்களும், அரியானாவில் 32 பேர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.