செஸ் போட்டியில் உலகச் சாம்பியனையே வீழ்த்திய சென்னை சிறுவன்…. குவியும் பாராட்டு!
- IndiaGlitz, [Tuesday,February 22 2022] Sports News
உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற மாஸ்டர் செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவன் நார்வே நாட்டைச் சேர்ந்த உலகச் சாம்பியன் வீரரை தோற்கடித்து வெற்றிப்பெற்றுள்ளார். இந்தத் தகவல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி தற்போது ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் உலகம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்டுள்ளனர். இதன் 8 ஆவது சுற்றில் சென்னையை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகின் சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனைத் தோற்கடித்து வெற்றிப்பெற்றுள்ளார். கருப்பு நிறக் காய்களைத் தேர்வுசெய்த விளையாடிய பிரக்ஞானந்தா இந்த வெற்றியை 39 ஆவது நகர்த்தலின்போது நிகழ்த்திக் காட்டினார்.
இதனால் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா 8 புள்ளிகளுடன் 12 ஆவது இடத்தில் உள்ளார். 16 வயதில் உலகச் சாம்பியன் வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா மீதான கவனம் தற்போதுஅதிகரித்திருக்கிறது. இதையடுத்து மீதமுள்ள 7 போட்டிகளில் அவர் என்ன செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
சென்னையில் கடந்த 2005 ஆகஸ்ட் 10 ஆம் தேதி பிறந்த பிரக்ஞானந்தா தனது 8 வயதில் கடந்த 2013இல் உலக யூத் சாம்பியன் பட்டத்தை வென்றார். 10 ஆவது வயதில் இளம் சர்வதேச மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார். மேலும் ரஷ்யாவின் செஸ் ஸ்டார் செர்கேவை தோற்கடித்து இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். தொடர்ந்து ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் கலந்துகொண்டுள்ள பிரக்ஞானந்தாவிற்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.