6 மணி நேரம் பப்ஜி விளையாடிய சிறுவன் பரிதாப மரணம்
- IndiaGlitz, [Friday,May 31 2019]
மத்திய பிரதேச மாநிலத்தில் மொபைல்போனில் தொடர்ந்து ஆறு மணி நேரம் பப்ஜி விளையாட்டை விளையாடிய சிறுவன் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் பரிதாபமாக மரணம் அடைந்தார்.
மத்திய பிரதேசத்தில் பர்தூர் என்ற 16 வயது சிறுவன் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுவன் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் உடனே மொபைல் போனை கையில் எடுத்து பப்ஜி விளையாட்டை விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவோ எடுத்து கூறியும் பப்ஜி விளையாட்டை இந்த சிறுவன் விடுவதில்லை.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை தொடர்ந்து ஆறு மணி நேரம் பப்ஜி விளையாட்டை மும்முரமாக விளையாடி கொண்டிருந்த பர்தூர் திடீரென நெஞ்சை பிடித்து மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பர்தூரின் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.
தனது சகோதரர் மறைவு குறித்து பர்தூரின் தங்கை கூறியபோது, 'என் அண்ணன் எப்போதும் பப்ஜி விளையாட்டை விளையாடி கொண்டிருப்பார். நாங்கள் எவ்வளவோ முறை கூறியும் அவர் இந்த விளையாட்ட்டை நிறுத்துவதில்லை. அந்த விளையாட்டே தற்போது அவருடைய உயிரை குடித்துவிட்டது' என்று கூறியுள்ளார்.
பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி பல இளைஞர்களின் உயிர்கள் பலியாகியுள்ள நிலையில் இந்த விளையாட்டை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.