திடீரென வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம்… சொந்தமாக வீடு கட்டிய பிறகு நடந்த டிவிஸ்ட்!
- IndiaGlitz, [Thursday,February 10 2022]
மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயி ஒருவரின் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.15 லட்சம் செலுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து பிரதமர் மோடி அறிவித்த 15 லட்சம் ரூபாய் தனக்கு கிடைத்துவிட்டதாகக் கருதிய அவர் செய்த ஒரு காரியம் தற்போது வங்கி அதிகாரிகளுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்திவிட்டது.
ஔரங்காபாத் அடுத்த பைதான் பகுதியில் வசித்துவந்த விவசாயி ஞானஷ்வர். இவருடைய ஜன் தன் வங்கிக் கணக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திடீரென 15 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டு இருக்கிறது. இதைப் பார்த்த அவர் பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் சொல்லிய தொகை தனக்கு கிடைத்துவிட்டதாக எண்ணியிருக்கிறார். இதனால் தனது வங்கிக்கணக்கில் இருந்து 9 லட்சம் ரூபாயை எடுத்து சொந்தமாக வீடு ஒன்றையும் கட்டி முடித்துள்ளார்.
இதையடுத்து 6 மாதங்கள் கழிந்த பிறகு திடீரென்று ஞானஷ்வரின் வீட்டைத் தேடி வங்கி அதிகாரிகள் வந்துள்ளனர். மேலும் வேறொரு நலப்பணித்திட்டத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை உங்களுடைய வங்கிக் கணக்கில் தவறுதலாக செலுத்திவிட்டோம். அதைத் திருப்பி கொடுத்துவிடுங்கள் எனக் கூறியுள்ளனர். இதனால் திடுக்கிட்டுப்போன ஞானேஷ்வர் 9 லட்சம் ரூபாயை செலவழித்து விட்டதாகக் கூறி மீதியிருந்த 6 லட்சம் ரூபாயை வங்கியில் திரும்ப செலுத்தியிருக்கிறார்.
ஆனால் செலவழித்த பணத்தை செலுத்த முடியாமல் தற்போது ஞானேஷ்வர் தவித்து வரும் நிலையில் வங்கி அதிகாரிகள் எனன செய்வதென்றே தெரியாமல் கவலை அடைந்திருக்கும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.