மயிலாடுதுறை பேரூராட்சி பகுதியில் நாளை 144 தடை உத்தரவு!

  • IndiaGlitz, [Wednesday,April 28 2021]

மயிலாடுதுறை மாவட்டத்தின் பேரூராட்சி பகுதிகளில் நாளை 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என அம்மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காரணம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை நடைபெற இருக்கிறது. தற்போது கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் வைத்தீர்ஸ்வரன் கோவிலுக்கு வரும் பக்தர்களை தடுப்பதற்கே இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

இதனால் இன்று (28) இரவில் இருந்தே பொதுமக்கள் யாரும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு உள்ளே நுழையாதவாறு பேரூராட்சி பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட இருக்கிறது. மேலும் பேரூராட்சி சுற்றியுள்ள பகுதிகளில் நாளை 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இதையடுத்து குடமுழுக்கு விழாவிற்காக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவின்படியும் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதலின் படியும் பக்தர்கள் யாரும் இன்றி தருமபுரம் ஆதினம் தலைமையில் இந்த விழா நடத்தப்பட இருக்கிறது.

இதையடுத்து நாளை அதிகாலை 4 மணிமுதல் நாளை இரவு 10 மணிவரை வைத்தீஸ்வரன் கோவில் சுற்றியுள்ள பேரூராட்சி பகுதிகளில் கடுமையான 144 தடை உத்தரவு அமலுக்கு வரவுள்ளது. மேலும் கோவில் சுற்றியுள்ள 4 வீதிகள், சுவாமி சன்னதி உள்ள தெருவில் கூட்டமாக நடக்கவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு குடமுழுக்கு விழாவில் பக்தர்களின் கூட்டநெரிசலை தடுப்பதற்கும் கொரோனா நேரத்தில் பொதுமக்கள் நலனைக் கருதியும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.