சென்னை மெரீனாவில் திடீர் 144 தடை. நடைப்பயிற்சி செல்ல முடியுமா?
- IndiaGlitz, [Sunday,January 29 2017]
சென்னை மெரீனாவில் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதித்திருப்பதாக காவல்துறையினர் நேற்று அறிவித்திருந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னை மெரீனாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த தடை உத்தரவு வரும் பிப்ரவரி 12ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
கடந்த வாரம் நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து மீண்டும் மெரீனாவில் மாணவர்கள் கூட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வந்து கொண்டிருப்பதை அடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மெரினாவில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பினும் சுற்றுலா பயணிகள், குடும்பத்தினர், குழந்தைகள், நடை பயிற்சி செல்வோர் ஆகியோர்களுக்கு அனுமதி உண்டு என்று காவல்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் காவல்துறையினர்களின் தடை காரணமாக இன்று காலை மெரினாவில் நடைப்பயிற்சி செல்வோரின் கூட்டம் குறைந்து இருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.