இரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்
- IndiaGlitz, [Sunday,June 07 2020]
இரவு முழுவதும் பப்ஜி விளையாட்டை விளையாடிய 14 வயது சிறுவன் அதிகாலை 3 மணிக்கு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காந்தி காலனி என்ற பகுதியில் ராணுவ வீரராக உள்ள ஒருவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அருணாச்சல பிரதேசத்தில் ராணுவத்தில் வேலை பார்த்து வரும் ஒருவர், தனது வீட்டிற்கு ஒரு சில மாதங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வருவார் என்பதால், அந்த வீட்டில் அவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மட்டும் வசித்து வந்தார்கள்.
இந்த நிலையில் அந்த வீட்டிலுள்ள ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தனது மொபைல் போனில் பப்ஜி விளையாட்டை டவுன்லோட் செய்து இருக்கிறார். அதிலிருந்து அவர் மூன்று நாட்களாக நீண்ட நேரம் பப்ஜி விளையாட்டை விளையாடிதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு பப்ஜி விளையாட்டை விளையாடத் தொடங்கிய அந்த சிறுவன் அதிகாலை 3 மணி வரை விளையாடியதாகவும் அதன் பின்னர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது.
காலையில் எழுந்த அந்த சிறுவனின் தாயார் தனது மகன் கிரில் கேட்டில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் துணையோடு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அந்த சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்காததால் போலீசார் இந்த மரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அதிகாலை 3 மணி வரை தனது சகோதரன் பப்ஜி விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்ததை தான் பார்த்ததாகவும் அவரது சகோதரன் கூறியதாக தெரியவந்துள்ளது.
விடிய விடிய பப்ஜி விளையாட்டை விளையாடிய ஒன்பதாம் வகுப்பு சிறுவன் அதிகாலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.