திருமணத்திற்கு சென்று கிணற்றில் விழுந்த பெண்கள்… 13 பேர் உயிரிழந்த சோகம்!

  • IndiaGlitz, [Thursday,February 17 2022]

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் திருமணத்திற்குச் சென்ற பெண்கள் தவறுதலாக பழைய கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்கடா எனும் பகுதியில் உற்றார், உறவினர்கள் சூழ திருமணம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. இந்தத் திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்ற நிலையில் அங்குள்ள பழைய கிணற்றின் மேலிருந்து பெண்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பழைய கிணற்றின் மீது இரும்பு கம்பியினால் செய்யப்பட்ட வலையும் அதன்மீது ஒரு மேடையும் போடப்பட்டு இருந்ததால் முதலில் இதுகுறித்து யாருக்கும் சந்தேகம் எழவில்லை.

ஆனால் கிணற்றின்மீதுள்ள மேடையின்மீது பெண்கள் அதிகளவில் உட்கார்ந்ததால் அது பாரம் தாங்காமல் சிறிது நேரத்திலேயே சரிந்து விழுந்திருக்கிறது. இந்த விபத்தில் 13 க்கும் மேற்பட்ட பெண்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு குஷிநகர் பகுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்தக் கோரச்சம்பவத்தைத் தொடர்ந்து குஷிநகர் மாவட்ட நிர்வாகம் சார்பாக உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி மாவட்ட நிர்வாகம் சார்பாக தேவையான அனைத்து உதவிகளும் செய்துகொடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.