மும்பையில் மீண்டும் கோரவிபத்து… 13 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!
- IndiaGlitz, [Friday,April 23 2021]
மகாராஷ்டிராவில் கொரோனா நோயத்தொற்றுக்குச் சிகிச்சை அளித்துவந்த மருத்துவமனை ஒன்றில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளதாகவும் அந்த விபத்தினால் கொரோனா நோயாளிகள் 13 பேர் உயிரிழந்து விட்டனர் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. மேலும் இந்த விபத்தில் சிக்கிய பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரப் பகுதியில் இருந்து விரார் மேற்கு பகுதியில் உள்ள வசாய் மருத்துவமனையில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் ஐசியு பிரிவில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு மின்கசிவு ஏற்பட்டு இருக்கிறது. இதை ஊழியர்கள் கவனிக்காத நிலையில் ஒட்டுமொத்த ஐசியு வார்டு முழுவதும் மின்கசிவு பரவி அது தீயாக மாறி இருக்கிறது. இதனால் மளமளவென பரவிய தீ அங்கிருந்த கொரோனா நோயாளிகளை தீக்கிரையாக்கியது.
இந்த விபத்தில் இதுவரை 13 கொரோனோ நோயாளிகள் உயிரிழந்து உள்ளனர். மேலும் அந்த வார்டில் இருந்த 21 பேர் காயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. வசாய் மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை தற்போது தீயணைப்பு துறையினர் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை அடுத்த நாசிக் மருத்துவமனையில் டேங்கர் லாரியில் இருந்து ஆக்சிஜன் வாயுக்கசிவு ஏற்பட்டு 22 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்து சில தினங்களே ஆன நிலையில் மும்பையில் அடுத்த பேரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதுவும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரு விபத்துகளும் நடந்து இருப்பது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.