தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறுமா? முதல்வர் ஸ்டாலின் அதிகாரபூர்வ அறிவிப்பு
- IndiaGlitz, [Saturday,June 05 2021]
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? என்பது குறித்த ஆலோசனை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன் 12ஆம் வகுப்பு தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், சட்டீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து என அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து தற்போது தமிழகமும் 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளது. இதனை அடுத்து மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர்கல்வித் துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் இக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும் என்றும், அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே, தமிழகத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி இந்த ஆண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு. pic.twitter.com/bbuBF68hQV
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 5, 2021