ராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி..! ட்ரென்டிங் வீடியோ

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் எம்.பி-யுமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக கேரளா வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் இன்று காலை வயநாடு தொகுதிக்கு உட்பட்ட கருவாராக்குண்டு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு அத்தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்டிக்கொடுத்த புதிய கட்டடத்தை திறந்துவைத்தார். பின்னர் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தத் தொடங்கினார். வழக்கமாக, ராகுல் காந்தி உரையை காங்கிரஸ் தலைவர்கள் மொழிபெயர்ப்பு செய்வதுதான் வழக்கம். ஆனால், இன்று ராகுல் தனது உரையை தொடங்குவதற்கு முன்னதாக மாணவர்களை நோக்கி, ''எனது பேச்சை மொழிபெயர்க்க முடியுமா? எனக் கேட்டார். ராகுல் அப்படிக் கேட்கவே அங்குள்ள மாணவர்கள் மத்தியில் ஒருவித படபடப்பு உருவானது. அப்போது அந்தப் பள்ளியில் படிக்கும் ஸபா பெஃபின் என்ற 12-ம் வகுப்பு மாணவி தைரியமாக மேடைக்கு வந்தார். மாணவியை வரவேற்ற ராகுல், அவர் பெயரை கேட்டுக்கொண்டார். பின்னர், ராகுல் மாணவர்கள் மத்தியில் அறிவியல் குறித்தும் நாடு குறித்தும் பேச அதைத் தெளிவாக மலையாளத்தில் மொழிபெயர்த்தார் ஸபா. அவரின் மொழிபெயர்ப்பை மாணவர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

கடைசியாகப் பேசி முடித்ததும் ''நன்றாக மொழிபெயர்த்தீர்கள்'' என ஸபாவை வெகுவாகப் பாராட்டிய ராகுல் காந்தி அவருக்கு சாக்லேட் கொடுத்து அசத்தினார். இந்தக் காட்சிகளைத்தான் இணையத்தில் பகிர்ந்து ஸபாவைக் கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பாக பேசிய அப்பள்ளி ஆசிரியர் ஒருவர், ''ராகுல் காந்தியின் உரையை ஸபா சிரமமின்றி மொழிபெயர்த்தார். அவள் பொருத்தமான வார்த்தைகளைக் குறிப்பாக மலப்புரம் பாஷையில் உடனுக்குடன் மொழிபெயர்த்து எங்கள் அனைவரையும் திகைக்க வைத்துவிட்டாள். ஸபாவால் எங்கள் பள்ளிக்குப் பெருமை எனக் கூறியுள்ளார்.

இது குறித்து ஸபா பெஃபின் கூறும் போது, ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்க்க முடியுமா என சற்று தயக்கமா இருந்தது, ஆசிரியர்களும் நண்பர்களும் நம்பிக்கைக் கொடுத்தனர் என்று கூறினார். இவர் பேசிய வீடியோ டிவிட்டரில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.