சென்னையில் புதிய உச்சத்தில் கொரோனா: ஒரே நாளில் 1000க்கும் மேல்!

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுவதை விட 1200க்கும் மேற்பட்டவர்கள் பாதித்துள்ளார்கள் என்பதே பொருத்தம்

ஆம், இன்று தமிழகத்தில் 1286 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது எனவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1286 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 1012 பேர்கள் என்பதும் இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,597ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் முதல்முறையாக 24 மணி நேரத்தில் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது சென்னை மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தியாக உள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 610 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,316 என உயர்ந்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் இன்று 11 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 14,101 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை 528,534 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது