12,110 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் தள்ளுபடி… விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர்!
- IndiaGlitz, [Friday,February 05 2021]
கடந்த சில தினங்களாகத் தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆளுநர் உரை மீதான விவாதத்தை முடித்துக் கொண்டு தற்போது 5 ஆவது நாளாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு வங்கியில் தமிழக விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகப் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழகச் சட்டப்பேரவை விதி 110 இன் கீழ் இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டு உள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடிக்கும் அதிகமான பயிர்க் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். மேலும் கொரோனா காலத்தில் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டு தமிழக முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்த தன்னுடைய உரையில்,
“உழுவார் உலகத்தார்க்கு அணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து”
என்ற திருக்குறளையும் அவர் சுட்டிக்காட்டினார். உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர்கள் எல்லோரையும் தாங்குவதால் உழவு செய்கின்றவர்கள் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்கள் என்றும் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். தமிழக விவசாயிகள் இந்த அறிவிப்பிற்கு பெரும் வரவேற்பு அளித்து உள்ளனர்.
கடந்த ஜனவரியில் ஏற்பட்ட நிவர் புயல் மற்றும் கொரோனா தாக்கத்தினால் தமிழக விவசாயிகள் கடும் நட்டத்தைச் சந்தித்து உள்ளனர். இந்நிலையில் 12,110 கோடி மதிப்பிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதோடு நிவர் புயலினால் ஏற்பட்ட இடுபொருள் நிவாரணத் தொகையையும் உயர்த்தி முன்னதாக அவர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.