120 இந்திய மாணவிகள் மலேசியா விமான நிலையத்தில் தஞ்சம்: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Tuesday,March 17 2020]
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல நாடுகளில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மலேசியா விமானங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வந்த இந்தியாவை சேர்ந்த 120 மாணவிகள் நாடு திரும்புவதற்காக மலேசியா வந்ததாகவும் தற்போது மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் மலேசியா விமான நிலையத்தில் சிக்கி தவித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த 120 மாணவிகளும் இந்தியாவிற்கு விமானத்தில் செல்ல மலேசியா விமான நிலையத்திற்கு வந்தபோது மலேசியா விமானங்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளதால் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே தஞ்சம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டுமென பிலிப்பைன்ஸ் நாடு உத்தரவிட்ட நிலையில் அவர்கள் அனைவரும் இந்தியா திரும்பி கொண்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் மலேசியா விமான நிலைத்தில் சிக்கியிருப்பதால் அவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் அந்த மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மலேசியா விமான நிலையத்தில் சிக்கியிருக்கும் இந்த 120 மாணவிகளில் நெல்லையை சேர்ந்த மாணவியும் ஒருவர் என்பதும், அவரை மீட்க உதவ வேண்டும் என நெல்லை ஆட்சியரிடம் அந்த மாணவியின் பெற்றோர் மனு கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்து 120 மாணவிகளும் பத்திரமாக இந்தியா திரும்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது.