பள்ளி சீருடையில் ரத்தம்: ஆசிரியை கண்டித்ததால் மாணவி தற்கொலை
- IndiaGlitz, [Thursday,August 31 2017]
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்துவந்த 13 வயது சிறுமியை வகுப்பாசிரியை திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 26ஆம் தேதி பாளையங்கோட்டை பள்ளி ஒன்றின் வகுப்பறையில் 7ஆம் வகுப்பு மாணவி ஒருவரின் சீருடையில் மாதவிடாய் காரணமாக ரத்தம் படிந்திருந்தது. இதனை வகுப்பு தோழிகள் சுட்டிக்காட்டியதும் அவர் கழிவறைக்கு சென்று சுத்தம் செய்துவிட்டு வந்தார்.
ஆனால் பள்ளி ஆசிரியை சக மாணவர், மாணவியர் முன் அந்த மாணவியை கண்டித்ததோடு பள்ளி தலைமை ஆசிரியரையும் பார்த்த்துவிட்டுத்தான் உள்ளே வரவேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்த மாணவி வீட்டிற்கு வந்தவுடன் சோகமாகவே இருந்துள்ளார், இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தூங்கிய பின்னர் மொட்டை மாடியில் இருந்து குதித்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த மாணவி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்கொலைக்கு முன் அந்த மாணவி எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ள காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவியின் மரணத்திற்கு நீதிவிசாரணை கோரி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகத்தினர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் ஒரு விஷயத்தை ஒரு பெண்ணாக இருந்தும் புரிந்துகொள்ளாமல் மாணவியின் மனதை புண்படுத்திய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர்.