காட்டு யானையைச் சுட்டுக் கொன்ற விவசாயி… வனத்துறையினரால் கைது!!!
- IndiaGlitz, [Thursday,November 05 2020]
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை அருகே வனத்துறையை ஒட்டிய பகுதியில் 12 வயது பெண் யானை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேன்கனிக் கோட்டை அடுத்து ஜவளகிரி எனும் பகுதியில் அடர்ந்த வனப்பகுதி ஒன்று உள்ளது. அதில் சென்னமாளாம் என்ற பகுதியை ஒட்டி விவசாய நிலங்களும், கிராமங்களும் இருப்பதால் காட்டு யானைகள் உள்ளே வராமல் தடுக்க அப்பகுதியை ஒட்டி அகலமான அகழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இந்த இடத்தில் நேற்று காட்டு யானைகள் கூட்டமாக வந்ததாகவும் மேலும் விவசாய நிலங்களை நோக்கி அந்தக் கூட்டம் நகர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது முத்துமல்லேஷ்(41) என்பவர் நாட்டுத் துப்பாக்கியை வைத்து யானையை பயமுறுத்துவதற்காக சரமாரியாகச் சுட்டு இருக்கிறார். இந்நிலையில் 12 வயது பெண் யானை ஒன்றின் பின்னந் தலையில் துப்பாக்கிக் குண்டு பட்டு அந்த யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறது. இதைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க அவர்கள் யானைக்கு பிரேத பரிசோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அதே இடத்தில் யானையை வனத்துறை அதிகாரிகள் புதைத்தும் இருக்கின்றனர். இதனால் முத்துமல்லேஷ் கைது செய்யயப்பட்டு இருக்கிறார்.