கேரளாவில் பரவும் நிபா வைரஸ்: 12 வயது சிறுவன் பலியானதால் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Sunday,September 05 2021]

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பதும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த பாதிப்பை விட தற்போது பல மடங்கு குறைந்து உள்ளது என்பதும் தெரிந்ததே. ஆனால் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் நேற்று கூட சுமார் 30 ஆயிரம் பேர் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது என்பதும் அங்கு இரவு நேர ஊரடங்கு மற்றும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் நிபா வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் கேரளாவில் பரவியுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு என்ற பகுதியில் 12 வயது சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இது குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு ஒன்று கேரள மாநிலம் விரைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக மருத்துவ நல்வாழ்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.