இதுவரை கைலாசாவிற்கு விண்ணப்பித்திருப்பவர்கள் இவ்வளவு பேரா..!
- IndiaGlitz, [Wednesday,December 11 2019]
12 லட்சம் பேருக்கு மேல் கைலாஷாவிற்கு விண்ணப்பித்துள்ளார்கள் என நித்தியானந்தா தனது வீடியோவில் கூறியுள்ளார்.
தினம் ஒரு சர்ச்சையில் சிக்கும் நித்யானந்தா எங்கேயிருக்கிறார் என்று தெரியவில்லை. மத்திய அரசு அவரைத் தேடி வருகிறது. ஈக்வடார் நாட்டின் அருகே ஒரு தீவை வாங்கி, தனி நாட்டை உருவாக்கி வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ஈக்வடார் நாடு, நித்யானந்தா குறித்த இந்தத் தகவலை மறுத்துள்ளது. கரீபியன் நாடானா ஹைட்டிக்கு அவர் சென்றதாக ஈக்வடார் சொல்கிறது. இதற்கிடையே, நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன், தொடர்ந்த வழக்கில் நித்யானந்தாவின் இருப்பிடத்தை இரு நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டுமென்று கர்நாடக உயர் நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
நித்யானந்தாவின் பாஸ்போர்ட் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதியுடன் காலாவதியாகியுள்ளது. அவர், 'விமான நிலையம் வழியாகவோ, துறைமுகம் வழியாகவோ இந்தியாவைவிட்டு வெளியேறவில்லை' என்று அதிகாரிகள் மறுத்துள்ளனர். நேபாளம் சென்று அங்கிருந்து ஈக்வடார் நாட்டுக்குச் சென்றிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. ஈக்வடார் இந்தியாவுடன் மனிதர்களை நாடு கடத்தும் ஒப்பந்தம் செய்துகொண்டிராத நாடு. ஒருவேளை ஈக்வடாரில் நித்யானந்தா தஞ்சம் அடைந்திருந்தால், இந்தியாவுக்கு அவரை மீண்டும் கொண்டு வருவது கடினமான விஷயமாகவே இருக்கும். அவரிடம் வெனிசூலா நாட்டு பாஸ்போர்ட் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஃபேஸ்புக் சத்சங் மூலம் தன் சீடர்களைத் தொடர்பு கொண்டுள்ள நித்யானந்தா, உற்சாகத்துடன் பேசினார். தன் பேச்சில், 'தான் தனி நாடு உருவாக்கியதற்கு சில நாட்டு அரசுகள் ஆதரவளித்துள்ளன. 'கைலாசா' என்ற நாட்டின் பெயரை 'ஸ்ரீகைலாசா' என்று மாற்றியிருக்கிறேன். பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் நிலம் தருவதாகக் கூறியுள்ளனர். தனி நாட்டுக்கு வருவதற்கு இதுவரை 12 லட்சம் பேர் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர். இணையத்தில் தினமும் 1 லட்சம் பேர் உறுப்பினர்களாகின்றனர். சர்வரே முடங்குமளவுக்கு கைலாசா. ஆர்க் இணையதளத்தை மக்கள் பார்வையிடுகின்றனர்.தனி நாட்டுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. விண்ணப்பித்தவர்கள் பதிலளிக்க கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்'' என்று தெரிவித்துள்ளார். கார்த்திகை தினத்தன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் நித்யானந்தா கூறினார்.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் வழியாக நித்யானந்தாவை வெளியுறவுத்துறை அமைச்சகம் தேடி வருகிறது. ஆனாலும், கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், ஃபேஸ்புக் வழியாக சத்சங் நிகழ்ச்சியை அவர் நடத்துகிறார். வீடியோக்களும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.