விளையாட்டு வீரர்களுக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
- IndiaGlitz, [Wednesday,November 03 2021] Sports News
தேசிய அளவில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் கேல் ரத்னா விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுகளை நேற்று இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா, மல்யுத்த வீரர் ரவிகுமார் தஹியா, குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன், இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், பாரா ஷுட்டர் அவனி லெகாரா, பாரா தடகள வீரர் சுமித் அன்டில், பாரா பேட்மிண்டன் வீரர்கள் பிரமோத் பகத் மற்றும் கிருஷ்ணா நகர், பாரா ஷுட்டர் மணீஷ் நர்வால், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரித் சிங், இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், கால்பந்து வீரர் சுனில் சேத்ரி என 12 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா என்றிருந்த பெயர் இந்த ஆண்டு முதல் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என பெயர்மாற்றப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த விருது வழங்கும் விழா வரும் நவம்பர் 13, 2021 மாலை 4.30 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு விளையாட்டு வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.