மூதாட்டியிடம் நகை திருட்டு...! விசாரித்து பார்த்ததில் வெளியான அதிர்ச்சி தகவல்....!

  • IndiaGlitz, [Thursday,June 10 2021]

கொரோனா பரிசோதனை செய்வது போலவே, பெண் ஒருவர் நகையை திருடிய சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, சேக்கிழார் பட்டியில் வசித்து வருபவர் தான் முனியம்மாள் என்ற 70 வயது நிரம்பிய மூதாட்டி. இப்பாட்டியின் கணவர் இறந்தநிலையில், அவர் வீட்டில் தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் முனியம்மாள் எப்போதும் போல வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது டபுள் மாஸ்க் அணிந்துகொண்டு வந்த பெண், வங்கியில் இருந்து கடிதம் வந்திருப்பதாகவும், அதில் கையெழுத்துப்போட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் வீட்டிற்குள் பேனாவை எடுக்க மூதாட்டி சென்றபோது, அவரைக்கட்டிப்போட்டு பாட்டி அணிந்திருந்த 11 பவுன் தங்கச்சங்கிலியை திருடிவிட்டு, தப்பியோடிவிட்டாள். இவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், ஓடிவந்து நடந்த சம்பவத்தை பார்த்துவிட்டு உசிலம்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் மூதாட்டியிடம் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணை நடத்தியதன் பேரில், பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது. தனியார் நகைக்கடையை அன்னம்பார்பட்டியைச் சேர்ந்த சேதுராமன் மற்றும் அவரது மனைவி உஷாராணி நடத்தி வந்துள்ளார்கள். இதில் உஷாராணி என்பவள் பாட்டியிடம் திருடிய செயினை, தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளார். இதையறிந்த காவல் துறையினர் இளம்பெண்ணை மடக்கிப்பிடித்து, கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், பாட்டியின் பேத்தி என்ற செய்தி தெரியவந்துள்ளது. செயினை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பேத்தியே, சொந்த பாட்டியிடம் திருடிய சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.