தோண்டப்பட்ட குழியில் 11,000 லிட்டர் பால் அபிஷேகம்… பரவசத்தில் பக்தர்கள்!!!
- IndiaGlitz, [Monday,December 28 2020]
ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டப்பட உள்ள ஒரு கோயில் கட்டுமானப் பணியின்போது பக்தர்கள் 11,000 லிட்டர் பால், தயிர் மற்றும் நெய்யை ஊற்றி அபிஷேகம் செய்த காட்சி பலரையும் வியக்க வைத்து உள்ளது. அம்மாநிலத்தின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் தேவநாராயண சுவாமிக்கு கோயில் கட்டப்பட உள்ளது. இந்தக் கோயில் கட்டுமானத்திற்காக அடிக்கல் நாட்டும் விழா சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது.
அதற்காகத் தோண்டப்பட்ட குழியில் பக்தர்கள் 11 ஆயிரம் லிட்டர் பால், தயிர் மற்றும் நெய்யை ஊற்றி வழிபாடு நடத்தி உள்ளனர். இந்நிலையில் இத்தனை உணவு பொருட்கள் வீணாகிறதே என வருத்தப்பட்ட சிலர் அம்மக்களிடம், இதுபோன்ற வழிபாடு இதற்கு முன்பு நடைபெற்று இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு விடையளித்த அப்பகுதி மக்கள் இதற்கு முன்பு இத்தனை பொருட்களை வைத்து நாங்கள் வழிபாடு செய்தது கிடையாது. முதல் முறையாக இப்படி வழிபாடு செய்கிறோம். மேலும் நம்முடைய கால்நடைகளை காப்பாற்றி நமக்கு எவ்வளவோ உதவி செய்யும் கடவுளுக்கு இது சிறிய காணிக்கை என்றும் அம்மக்கள் பதில் அளித்து உள்ளனர்.
இந்நிலையில் அடிக்கல் நாட்டு விழாவில் ஊற்றப்பட்ட 11 ஆயிரம் லிட்டரில் 1,500 லிட்டர் தயிர் மற்றும் 1 குவிண்டால் நெய்யும் அடக்கம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் ஒட்டுமொத்த விலை ரூ.1.50 லட்சம் என மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்தக் கோயில் திருப்பணிக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அடுத்த 2 மாதத்திற்குள் இத்திருப்பணி நிறைவு பெற்று பொது மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் எனவும் தகவல்கள் கூறப்படுகின்றன.