110 நாட்கள் இடைவிடாத ஓட்டம்… புதிய சாதனை படைத்த சிங்கப்பெண்!
- IndiaGlitz, [Thursday,March 31 2022]
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த இளம் தடகள வீராங்கனை ஒருவர் இந்தியாவின் நாற்கர சாலையை ஒடியே கடந்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். இது அவருடைய இரண்டாவது கின்னஸ் சாதனை என்பதால் பொதுமக்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தடகளப் போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்ட சுஃபியா கான் தனது சிறிய வயது முதலே விளையாட்டில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உதவியாளராகப் பணிப்புரிய வாய்ப்புக் கிடைத்தும் அதனை மறுத்துவிட்டு தடகளப் போட்டியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். இதன் அடிப்படையில் முன்னதாக லே பகுதியில் இருந்து மணாலி வரை 480 கிலோ மீட்டர் தூரத்தை சுஃபியா வெறும் 6 நாட்கள், 12 மணிநேரம், 6 நிமிடங்களில் கடந்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
தொடர்ந்து மேலும் சாதனை புரிய வேண்டும் என விரும்பிய அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 87 நாட்கள் தொடர்ந்து ஓடிச்சென்று கன்னியாகுமரியை அடைந்தார். இவரது சாதனை கின்னஸ் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் அவர் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னையை எனும் நான்கு பெரும் நகரங்களையும் இணைக்கும் தங்க நாற்கர சாலையை கடந்திருக்கிறார்.
இதற்காக 6,002 கிலோ மீட்டர் தூரத்தை சுஃபியா 110 நாட்கள், 23 மணிநேரம் 24 நிமிடங்கள் ஒடியிருக்கிறார். இவரது புதிய முயற்சி கின்னஸ் சாதனை குழுவால் அங்கீகரிக்கப்பட்டு இரண்டாவது முறை அவர் கின்னஸ் சாதனை படைத்திருப்பது பலருக்கும் புது உற்சாகத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.