தஞ்சையில் மேலும் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு!
- IndiaGlitz, [Monday,March 22 2021]
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் தஞ்சை, கும்பகோணம் போன்ற பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பல பள்ளி, கல்லூரிகளில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தஞ்சையில் ஏற்கனவே 2 பள்ளி மாணவர்களிடம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில் மேலும் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தமிழகச் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. இதனால் தஞ்சையில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்டு இருக்கும் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 பள்ளிகளில் 168 ஆக உயர்ந்து உள்ளது.
இதைப்போல கும்பகோணத்தில் மேலும் 10 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் மாரியம்மன் கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகளைத் தவிர கும்பகோணம் மாவட்டத்தில் 5 கல்லூரி மாணவர்களுக்கும் மேலும் ஒரு பல்கலைக்கழகம் மற்றும் 2 கல்லூரிகளைச் சார்ந்த 5 மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிச் செய்யப்பட்டு உள்ளது. இதனால் கும்பகோணம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்டு இருக்கும் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 148 ஆக உயர்ந்து உள்ளது. இத்தகவலை அடுத்து தமிழகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.