ஆக்சிஜன் பற்றாக்குறை: செங்கல்பட்டு மருத்துவமனையில் 11 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நேற்றிரவு 11 நோயாளிகள் உயிரிழந்ததாகப் பரபரப்புத் தகவல் வெளியாகி உள்ளது. நேற்று இரவு 10 மணி முதலே செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் இதையடுத்து ஒரு சில நிமிடங்களிலேயே 4 நோயாளிகள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் வரவழைக்கப் பட்டதாகவும் அடுத்த 3 மணிநேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப் பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இடைப்பட்ட நேரத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 11 நோயாளிகள் உயிரிழந்து உள்ளனர்.
இதில் எத்தனை பேர் கொரோனா நோயாளிகள் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த உயிரிழப்பு குறித்து கேள்விபட்ட உடனேயே அம்மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு விசாரணை நடத்தி உள்ளார். மேலும் இந்தச் சம்பவம் குறித்து பேசிய அவர் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. இந்த உயிரிழப்பு எதிர்பாராத விதமாக நடந்து விட்டது எனவும் விளக்கம் அளித்து உள்ளார்.
டெல்லி, மும்பை, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் முதல் முறையாக இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது. தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து செங்கல்பட்டில் அதிகளவு கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 நோயாளிகள் உயிரிழந்து இருப்பதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments