இன்னும் ஒரே ஒரு சிறுவன்: குகை மீட்பு பணியில் உள்ளவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்
- IndiaGlitz, [Tuesday,July 10 2018]
தாய்லாந்து நாட்டில் தாம்லுவாங் என்ற குகைக்குள் சாகச பயணம் மேற்கொண்ட 12 சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாளர் என 13 பேர் சிக்கிக் கொண்டனர். குகைக்குள் இவர்கள் சிக்கிய நேரத்தில் பலத்த மழை பெய்து வெள்ளம் குகைக்குள் புகுந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருந்த சிறுவர்களை மீட்க தாய்லாந்து மீட்புப்படையினர் அதிரடியாக களமிறங்கினர். தங்கள் உயிரையும் பணயம் வைத்து மீட்புப்படையினர் சிறுவர்களை ஒவ்வொருவராக மீட்டு வந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இதுவரை 11 சிறுவர்கள் மீட்கப்பட்டுவிட்டனர். இன்னும் ஒரே ஒரு சிறுவன் மற்றும் பயிற்சியாளர் மட்டுமே மீட்கப்பட வேண்டியதுள்ளதாகவும், அவர்களையும் இன்றுக்குள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தாய்லாந்து மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குகையில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றி அங்கிருந்த வயல்வெளிகளில் விடப்பட்டது. இதனால் அந்த வயல்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் இதுகுறித்து அந்த வயலுக்கு உரியவர்கள் கூறியபோது 'எங்கள் நிலத்தில் உள்ள பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை. குழந்தைகளை மீட்பதுதான் இப்போதைக்கு முக்கியம்' என்று கூறினர். ஆனால் குகையில் இருந்து தண்ணீரை வெளியேற்றிய மீட்ப்புக்குழுவினர் வயல்களில் இருந்தும் தண்ணீரை வெளியேற்றிவிட்டுதான் நாங்கள் எங்கள் பணியை முடிப்போம், எங்களால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது' என்று கூறியது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த நிலையில் சிறுவர்களை நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி திறமையாக மீட்டெடுத்த மீட்புக்குழுவினர்களுக்கு தாய்லாந்து மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.