10ஆம் வகுப்பு தேர்வு ரத்து: தூக்கில் தொங்கி மாணவி தற்கொலை
- IndiaGlitz, [Tuesday,June 09 2020]
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு ஜூன் 15 முதல் 25 வரை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு இருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கிணங்க 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று காலை அறிவித்திருந்தார். மேலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் வாங்கிய காலாண்டு மட்டும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின்படி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார் முதல்வரின் இந்த அறிவிப்பால் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இந்த அறிவிப்பு வருவதற்கு ஒரு நாள் முன்பு அதாவது நேற்று 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை என்ற பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் உதய தர்ஷினி 10ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், தேர்வு வரும் 15ஆம் தேதி உறுதி என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை அன்று உதயதர்ஷினி, பள்ளிக்குச் சென்று ஹால் டிக்கெட் வாங்கி வந்தார். அதன்பின் அவர் தேர்வு பயத்தால் மனவிரக்தியுடன் இருந்ததாகவும் யாருடனும் பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவர் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தேர்வு பயம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது. 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து என ஒரு நாளுக்கு முன்பு அறிவிப்பு வந்திருந்தால் இந்த மாணவியின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் அந்த பகுதியில் உள்ளவர்கள் சோகத்துடன் தெரிவித்து வருகின்றனர்.