ஆன்லைன் வகுப்பு கொடுமை… பாடம் புரியாததால் 10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!!!
- IndiaGlitz, [Wednesday,September 16 2020]
சிவகங்கை அருகே ஆன்லைனில் நடத்தும் பாடம் புரியாமல் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை அடுத்த திருப்புவனம் பகுதியில் உள்ள செல்லப்பனேந்தல் எனும் கிராமத்தைச் சார்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் சுபிக்ஷா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கொரோனா தாக்கத்தால் தமிழகப் பள்ளி நிறுவனங்கள் தற்போது ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த சுபிக்ஷா ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்கள் புரியாமல் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இவர் இந்த ஆண்டு 10 வகுப்பு பொதுத்தேர்வில் தான் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தினால் தற்கொலை செய்து கொண்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே நீட் தேர்வு அச்சத்தினால் தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் தற்போது ஆன்லைனில் நடத்தப்படும் பாடம் புரியாமல் ஒரு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் அஞ்சப்படுகிறது.
மாணவி சுபிக்ஷா கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசை வென்று தமிழக முதல்வர் கையால் பரிசு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தனை திறமையான குழந்தைகள் இதுபோன்று முடிவுகளை எடுப்பது குறித்து தற்போது சமூக நல ஆர்வலர்களும் கடும் அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதனால் ஆன்லைன் வகுப்புகளுக்கு மேலும் எதிர்ப்புகள் கிளம்பும் எனவும் கூறப்படுகிறது.