'10 எண்றதுக்குள்ள' திரைவிமர்சனம் தமிழில் ஒரு ஹாலிவுட் படம்.
Send us your feedback to audioarticles@vaarta.com
சீயான் விக்ரம், கோலிசோடா' இயக்குனர் விஜய்மில்டன், தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய மூவரும் இணைந்தபோதே '10 எண்றதுக்குள்ள' என்ற இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இவர்களுடன் சமந்தாவும் இணைந்ததால் எதிர்பார்ப்பு உச்சத்தை அடைந்தது. இந்த படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் ஆகியவை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பாரப்பை பூர்த்தி செய்ததா? என்பதை தற்போது பார்ப்போம்.
'பிரசாதம்' என்ற பெயரில் ஒரு பொருளை ஒரு இடத்தில் இன்னொரு இடத்திற்கு கடத்தி அதற்கு கூலி வாங்கும் தொழில் செய்யும் பசுபதி, அவ்வப்போது இந்த தொழிலில் டிரைவிங்
பள்ளியில் டிரைனிங் ஆக வேலை செய்யும் விக்ரமை பயன்படுத்தி கொள்கிறார். விக்ரம் ரிஸ்க் எடுத்து செய்யும் வேலையில் அவருக்கு சில ஆயிரங்கள் மட்டும் கொடுத்துவிட்டு லட்ச
லட்சமாக பசுபதி சம்பாதிக்கின்றார். பசுபதி கொடுத்த வேலையை செய்துவிட்டு, அவ்வப்போது எதிர்பாராமல் சந்திக்கும் சமந்தாவிடம் கேலியும் கிண்டலுமாக கலாய்த்து வருகிறார்
இந்நிலையில் வட இந்தியாவின் பிரபல கடத்தல் மன்னன் அபிமன்யா சிங், பசுபதியிடம் சமந்தாவின் புகைப்படத்தை அனுப்பி அவரை கடத்த வேண்டும் என்ற புரொஜக்டை கொடுக்கின்றார்.
சமந்தாவை கடத்தி உத்தரகாண்ட் மாநிலத்தில் தான் சொன்ன இடத்தில் கொண்டு வந்து சேர்த்தால் ஒரு கோடி ரூபாய் என்றும் சேர்க்காவிட்டால் உன் உயிர் போகும்' என்றும் மிரட்டுகிறார். அபிமன்யூவின் வேலையை ஏற்றுக்கொண்டு, சமந்தாவை தன்னுடைய ஆட்களை வைத்து கடத்திவிட்டு வரும்போது டிராபிக் போலீசிடம் பசுபதி குரூப் மாட்டுகின்றனர். காலையில் கோர்ட்டில் பெனால்ட்டி கட்டிவிட்டு காரை எடுத்து கொள்ளுங்கள் என்று கூறி சமந்தா மறைத்து வைக்கப்பட்டுள்ள அந்த காரை போலீஸ் வாகனத்திற்குள் ஏற்றுகின்றனர்.
இந்த சமயத்தில் விக்ரமின் உதவியை நாடுகிறார் பசுபதி. காரில் சமந்தா இருக்கின்றார் என்ற உண்மையை சொல்லாமல், காரை போலீஸ் வாகனத்தில் இருந்து மீட்டு, அதை உத்தரகாண்ட்
மாநிலத்திற்கு எடுத்து செல்' என்று மட்டும் சொல்கிறார் பசுபதி. சமந்தா காரினுள் இருப்பது தெரியாமலே காரை எடுக்கும் விக்ரம், வழியில் ஒரு இடத்தில் சாப்பிட காரை நிறுத்துகிறார்.
அப்போது காரினுள் இருக்கும் சமந்தாவை இன்னொரு குரூப் கடத்துகிறது. அவர்களிடம் இருந்து சமந்தாவை மீட்கும் விக்ரம், தன்னுடைய காரில்தான் சமந்தா இருந்தார் என்பதை அறியாமல், அவரை தன்னுடன் வருமாறு கேட்டுக்கொள்கிறார். சமந்தாதான் 'பிரசாதம்' என்று தெரியாமலேயே உத்தரகாண்ட் செல்லும் விக்ரம், அங்கு சென்றவுடன் தெரிந்து கொள்ளும் திடுக்கிடும் உண்மைகள், சமந்தாவை ஏன் வில்லன் குரூப் கடத்துகிறார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி ஆகிறார். அவர்களிடம் இருந்து சமந்தாவை விக்ரம் மீட்டாரா? என்பதுதான் கிளைமாக்ஸ்.
முதல் காட்சியிலேயே ஜேம்ஸ்பாண்ட் பாணியில் பறக்கும் காரில் அட்டகாசமாக அறிமுகமாகும் விக்ரம் படம் முழுவதும் ஜாலியாகவும், சீரியஸாகவும் மாறி மாறி வருகிறார்.
சமந்தாவுக்கு டிரைவிங் சொல்லிக்கொடுக்கும் அவர் படும் பாடு நல்ல நகைச்சுவை. பின்னர் உத்தரகாண்ட் செல்லும்போது கொஞ்சம் கொஞ்சமாக சமந்தாவிடம் மனதை பறிகொடுப்பது, சமந்தா யாரும் இல்லாத அனாதை என்பதை அறிந்து அனுதாப்படுவது, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு துயரமான சம்பவத்தை சமந்தாவிடம் பகிர்ந்து கொள்வது, இறுதியில் சமந்தாவை எதற்காக கடத்துகிறார்கள் என்பதை அறிந்து அதிர்ந்து அவரை மீட்க உயிரையே பணயம் வைப்பது, என படம் முழுவதும் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சீயான் விக்ரம்.
இது விக்ரம் படமா? அல்லது சமந்தா படமா? என்று கூறும் அளவுக்கு சமந்தாவுக்கு இந்த படத்தில் வலுவான கேரக்டர். பல படங்களில் நாயகனுடன் டூயட் மட்டும் பாடி விட்டு சென்ற சமந்தாவுக்கு இந்த படம் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம்தான். முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரை விக்ரமுடன் சமமாக பயணிக்கும்படி அவரது கேரக்டரை இயக்குனர் பிரமாதமாக அமைத்துள்ளார். சமந்தாவும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் இது உண்மையிலேயே சமந்தா தானா? என்று ஆச்சரியபடுத்தியுள்ளார்.
பசுபதிக்கு வழக்கம்போல ஒரு ரெளடி கும்பலின் தலைவர் கேரக்டர். இந்த கேரக்டரை அவர் அசால்ட்டாக செய்து விடுவார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் மெயின் வில்லனாக,
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜாதி வெறியராக நடித்துள்ளார் ராகுல்தேவ். சாதாரணமாக ஒரு பெண்ணை, காதலுக்கோ, காமத்திற்கோ அல்லது பணத்திற்கோ கடத்துவார்கள். ஆனால்
இந்த படத்தில் சமந்தாவை கடத்துவதற்கு அவர் கூறும் காரணத்தை கேட்டு விக்ரம் மட்டுமல்ல, ஆடியன்ஸ்களும் அதிர்ந்துவிடுகின்றனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் கூறியதுபோல் இந்த படத்தில் 'ஐ லவ் யூ' இல்லை, டூயட் இல்லை ஆனால் படம் முழுவதும் ஒரு மெல்லிய காதல் இருந்துகொண்டே
இருக்கும். அதற்கு அவ்வப்போது வரும் டி.இமானின் பாடல்கள் கைகொடுத்துள்ளது. அனூப் சீலின் (Anoop Seelin) அவர்களின் பின்னணி இசை ஹாலிவுட்டுக்கு இணையானது. அமர்க்களப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்
Fast and Furious" வரிசை ஹாலிவுட் படங்களை பார்த்துவிட்டு, இதுபோன்ற ஒரு முழுநீள ஆக்சன் படத்தை நம்மூர் இயக்குனர்கள் எப்போது இயக்குவார்கள்? என பல ஆண்டுகளாக
காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான ஆக்சன் விருந்தை கொடுத்துள்ளார் விஜய் மில்டன். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை விறுவிறுப்பு கொஞ்சமும் குறையவில்லை.
சார்மியின் பாடல் மட்டும் படத்தில் வேண்டுமென்றே திணிக்கப்பட்டதுபோல் இருந்தது. இதை மட்டும் இயக்குனர் தவிர்த்திருக்கலாம். மேலும் சமந்தாவுக்கு முன்பே இன்னொரு பெண்ணையும் வில்லன் குரூப் கடத்துகின்றனர். சமந்தாவை கடத்தியதற்கான காரணத்தை தெளிவாக விளக்கிய இயக்குனர், அந்த இன்னொரு பெண்ணை எதற்காக கடத்தினார்கள்? என்பதை கடைசி வரை அவர் விளக்கவில்லை. மற்றபடி இந்த படத்தில் சொல்லுக்கொள்ளும்படி குறைகள் எதுவும் தெரியவில்லை.
கிட்டத்தட்ட கால்வாசி படம் சேஸிங் காட்சிகள் உள்ள இந்த படத்தில் ஒளிப்பதிவாளருக்கு செம வேலை. சேஸிங் காட்சிகளை மிகச்சிறப்பாக ஒளிப்பதிவாளர் பாஸ்கருக்கும், அந்த காட்சிகளை மிக கச்சிதமாக எடிட்டிங் செய்த ஸ்ரீகர் பிரசாத் அவர்களுக்கும் பாராட்டுக்கள்
ஆக்சன், காதல், காமெடி என சரியான விகிதத்தில் மூன்றையும் கலந்து ஒரு விறுவிறுப்பான படத்தை தயாரித்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கும் ஒரு பாராட்டு.
மொத்ததில் '10 எண்றதுக்குள்ள' தமிழில் ஒரு ஹாலிவுட் படம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout