வாழைப்பழக் கூழுக்குள் 1,000 கிலோ கொக்கைன்… பரபரப்பான கடத்தல் பின்னணி!!!
- IndiaGlitz, [Wednesday,December 09 2020]
கொரோனா காலத்திலும் உலகம் முழுவதும் போதைப் பொருள் கடத்தல் விவகாரங்கள் தொடர்ந்த நடைபெற்று கொண்டே இருக்கிறது. பிரிட்டன் துறைமுகத்தில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி 1,000 கிலோ எடை கொண்ட கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய மதிப்பில் இது ரூ.1,000 கோடிக்கு விற்பனை செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த கொக்கைனை, கடத்தல் காரர்கள் வாழைப்பழக் கூழுக்குள் வைத்து கடத்தியதுதான் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருளான வாழைப்பழக் கூழுக்குள் வைத்து ஒரு டன்க்கும் அதிகமான கொக்கைன் போதைப் பொருள் கடத்தப்பட்டு இருக்கிறது. இது கொலம்பியாவில் இருந்து பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. மீண்டும் பிரிட்டனில் இருந்து இந்தப் போதைப் பொருள்கள் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரத்திற்கு செல்ல இருந்ததாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர். இந்நிலையில் பெல்ஜியத்திற்கு அனுப்பட இருந்தாலும் குறைந்த அளவில் கொக்கைன் பிரிட்டனிலும் விற்பனை செய்யப்படலாம் என்ற அச்சத்தை பிரிட்டன் அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.
பிரிட்டனின் எல்லையில் இதற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் மாதத்தில் 1,155 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து சில மாத இடைவெளியில் மீண்டும் ஒரு டன்னுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இதுபோன்ற கடத்தல் விவகாரங்கள் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.