ரிலீசுக்கு முன்பே ரூ.100 கோடி. 'சி 3' தயாரிப்பாளர் தகவல்

  • IndiaGlitz, [Monday,January 30 2017]

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி3' படத்தின் பிரஸ்மீட் நேற்று நடந்தது. இதில் சூர்யா, ஞானவேல்ராஜா, ஹரி உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த பிரஸ்மீட்டில் சூர்யா பேசியபோது, 'சிங்கம் படத்தின் பாகங்கள் தன்னுடைய இருபது வருட திரையுலக வாழ்க்கையில் தனக்கு ஒரு தனி அடையாளத்தை கொடுத்ததாகவும், இந்த படத்தை பார்த்த தனது குடும்ப உறுப்பினர்கள் முதல் இரண்டு பாகங்களை விட இந்த மூன்றாம் பாகம் மிக அருமையாக வந்துள்ளதாகவும் கூறினார். மேலும் இயக்குனர் ஹரியின் கடின உழைப்பு இந்த படம் சிறப்பாக வர முக்கிய காரணம் என்று கூறிய சூர்யா, ஹாரீஸ் ஜெயராஜ் இந்த படத்தின் ஒரு முக்கிய சொத்து என்றும் கூறினார்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜ் கூறியபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு அடுத்து தென்னிந்தியாவில் ரிலீசுக்கு முன்பே இந்த படம் அதிக வியாபாரத்தை பெற்றுள்ளதாகவும் ரிலீசுக்கு முன்பே இந்த படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதாகவும் கூறினார். மேலும் சூர்யா தன்னுடைய முன்னேற்றத்தில் எப்போதும் அக்கறை எடுத்து கொள்வார் என்றும் இந்த படத்திற்கான அவருடைய உழைப்பை அளவிடவே முடியாது என்றும் கூறினார். மேலும் எதிர்பாராத பல காரணங்களில் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிபோனதற்கு ரசிகர்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

இயக்குனர் ஹரி பேசியபோது, 'கடந்த 10 ஆண்டுகளில் சூர்யாவுடன் இணைந்து 5 படங்களில் பணியாற்றியுள்ளதாகவும், சூர்யாவுடன் பணிபுரியும்போது தனக்கு ஒரு இனந்தெரியாத மகிழ்ச்சி கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பிப்ரவரி 9ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள 'சி3' படத்தில் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.