புத்தாண்டு கொண்டாட்டம்: அதிவேகமாக சென்ற 100 இளைஞர்கள் பிடிபட்டனர்!

  • IndiaGlitz, [Wednesday,January 01 2020]

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்தி வாகனங்களை இயக்க கூடாது என்றும், பைக் ரேஸில் ஈடுபடக்கூடாது என்றும், அதி வேகமாக வாகனங்களை ஓட்டக் கூடாது என்றும் போலீசார் எச்சரிக்கை செய்து இருந்தும் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 100 இளைஞர்கள் நேற்று இரவு பிடிபட்டுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிவேகமாக பைக் ஓட்டியதாலும் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் 100 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட இளைஞர்கள் யாரையும் கைது செய்யவில்லை என்றும் அவர்களிடம் எச்சரிக்கை மட்டும் விடுத்து போலீசார் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக புத்தாண்டு கொண்டாட்டத்தை அடுத்து குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் சென்னை நகர் முழுவதும் பல இடங்களில் வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டு அதில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை பொருத்தவரை காவல்துறையினர்களின் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக நேற்றைய புத்தாண்டு எந்தவிதமான அசம்பாவிதமும் இன்றி சிறப்பாக கொண்டாடப்பட்டு முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.