எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 10 வயது சிறுமி…
- IndiaGlitz, [Wednesday,May 25 2022]
மும்பையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் எவரெஸ்ட் ஸ்பேஸ் கேம்ப் வரை மலையேற்றத்தில் ஈடுபட்டு புது சாதனை படைத்துள்ளார். மலையேற்றத்தில் இவருக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து பலரும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மும்பையில் வசித்துவரும் ரிதம் மமானியா எனும் சிறுமி தற்போது பாந்த்ரா பகுதியில் இயங்கிவரும் பள்ளி ஒன்றில் 5 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். ஸ்கேட்டிங் வீராங்கனையான இவர் தனது சிறு வயதில் இருந்தே பெற்றோர்களுடன் இணைந்து மலையேறுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். அந்த வகையில் 5 வயதிலேயே மலைகளை அளப்பதில் ரிதம் ஆர்வம் காட்டியதாக அவருடைய பெற்றோர் ஹர்ஷல் மற்றும் ஊர்சி இருவரும் பெருமையாகக் கூறிக்கொள்கின்றனர்.
மேலும் துத்சாகர், சஹ்யாத்கி போன்ற மலைத் தொடர்களில் சிறுசிறு மலையேற்றங்களில் ஈடுபட்ட ரிதம் தற்போது முதல் முறையாக எவரெஸ்ட் ஸ்பேஸ் கேம்ப் வரை மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக 11 நாட்களாகக் கடும் பனிப்பொழிவு, ஆலங்கட்டி மழை, செங்குத்தான மலைப்பாதை போன்ற வழிகளில் பயணித்த ரிதம் கடந்த மே 6 ஆம் தேதி எவரெஸ்ட் ஸ்பேஸ் கேம்ப்பை அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இயைதடுத்து இளம் இந்திய மலையேற்ற வீராங்கனை எனும் பட்டியலில் இணைந்துள்ள ரிதம் மமானியாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.