2500 கிமீ, 93 நாட்கள்: பாட்டியை சந்திக்க நடந்தே சென்ற 10 வயது பேரன்
- IndiaGlitz, [Saturday,October 03 2020]
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நேரத்தில் லட்சக்கணக்கானோர் தங்களுடைய சொந்த ஊருக்கு ஆயிரக்கணக்கான கிமீ நடந்தே சென்றனர். குறிப்பாக இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் வரை தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தனது பாட்டியை சந்திப்பதற்காக மூன்று நாடுகள் கடந்து 2500 கிலோ மீட்டர் நடந்து சென்ற 10 வயது சிறுவன் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இத்தாலியை சேர்ந்த 10 வயது சிறுவன் ரோமியோ காக்ஸ் என்பவர் தனது தந்தையுடன் இணைந்து இத்தாலியிலிருந்து சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் வழியாக இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனுக்கு நடந்தே சென்று உள்ளார்.
இவர் பயணம் செய்த நாட்கள் 93 நாட்கள் என்றும், பயணம் செய்த தூரம் 2500 கிலோ மீட்டர் என்றும் தெரியவந்துள்ளது. இவர் தனது பயணத்தில் பெரும்பாலும் நடந்து சென்றதாகவும் சில இடங்களில் மட்டும் படகு, சைக்கிள் மற்றும் கழுதை சவாரியில் சென்றதாகவும் தெரிகிறது.
பாட்டியை சந்திப்பதற்காக 2500 கிலோ மீட்டர் நடந்து சென்ற 10 வயது சிறுவனுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.