நெட்பிளிக்ஸில் பார்க்க வேண்டிய பத்து சிறந்த படங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு வாரமாக வீட்டில் இருக்கும் பொதுமக்களுக்கு தற்போது இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி தான். அதிலும் சீரியல்கள் படப்பிடிப்பு நடைபெறவில்லை என்பதால் பழைய எபிசோட்களை மீண்டும் திரும்ப ஒளிபரப்புகின்றன. இந்த நிலையில் ரசிகர்களுக்கு தற்போது கைகொடுப்பது அமேசான் ப்ரைம் டைம், நெட் பிளிக்ஸ், சன் நெக்ஸ்ட், போன்ற தளங்கள் தான்.
தற்போது நெட்பிளிக்ஸில் இதுவரை நாம் பார்க்காமல் மிஸ் செய்த அல்லது மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் திரைப்படங்கள் குறித்த ஒரு பார்வை.
1. பேட்ட: இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூடன் முதல் முறையாக இணைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம். காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு, 90களில் பார்த்த ஸ்டைலான ரஜினி, எதிர்பாராத கிளைமாக்ஸ், படம் முழுவதும் தலைவரை ரசித்து ரசித்து இயக்குனர் செதுக்கிய காட்சிகள் ஆகியவை இந்த படத்தின் சிறப்பு.
2. சர்கார்: 49P என்றால் என்ன என்பது இந்த படம் வெளிவருவதற்கு முன் பலருக்கு தெரியாது. நமது ஓட்டை கள்ள ஓட்டாக யாராவது போட்டுவிட்டால் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கின்றதா? என்பது இந்த படம் வெளிவந்தபின்னர் தான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸின் விறுவிறுப்பான திரைக்கதை, தளபதி விஜய்யின் அசத்தலான நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் அபாரமான பாடல்கள் அனைத்தும் ஒருங்கே இணைந்த மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் ஒரு படம்.
3. மெர்சல்: அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்த இந்த படம் ‘ஆளப்போறான்’ தமிழன் பாடலுக்காகவே எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம். குறிப்பாக வெற்றிமாறன் கேரக்டர் இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ். காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யாமேனன் என மூன்று ஹீரோயின்கள். எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தனம், வடிவேலுவின் காமெடி, சத்யராஜின் குணசித்திர நடிப்பு ஆகியவை இந்த படத்தின் சிறப்பு.
4. மேற்கு தொடர்ச்சி மலை: தமிழ் சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படம். ஒரு படம் மிகைப்படுத்தாமல், இயல்பாக எப்படி உருவாக்க வேண்டும் என்று ஹாலிவுட் இயக்குனர்களுக்கே பாடம் சொல்லி கொடுக்கும் படம். விஜய்சேதுபதி தயாரிப்பில் உருவான இந்த படத்தை நாம் பார்க்கும்போது நாமே மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று வந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.
5. கேம் ஓவர்: ’பந்தம்’ படத்தில் சிவாஜி கணேசன், ‘வரலாறு’ படத்தில் அஜித் என ஒருசிலர் நடிகர்கள் மட்டுமே கிட்டத்தட்ட படம் முழுவதும் உட்கார்ந்து கொண்டே தங்களது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் டாப்ஸி பாதி படத்திற்கும் மேல் வீல் சேரில் மட்டுமே உட்கார்ந்து நடித்த படம். ஒரு நல்ல த்ரில் படம் பார்த்த அனுபவம் இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் கிடைக்கும்.
6. சூப்பர் டீலக்ஸ்: 12 வருடத்திற்கு ஒருமுறை குறிஞ்சிப்பூ பூப்பது போல் பத்து வருடத்திற்கு ஒரு படம் எடுப்பவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. ‘ஆரண்ய காண்டம் படம் வெளிவந்து இப்போது வரை பேசிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் இயக்கிய அடுத்த படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ இன்னும் பத்து ஆண்டுகளுக்கும் மேல் பேசும். விஜய்சேதுபதியின் திருநங்கை நடிப்பை தற்போது இருக்கும் நடிகர்களில் வேறு யாராவது நடிக்க முடியுமா என்பது சந்தேகமே. பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி என கச்சிதமான நடிகர், நடிகைகளின் தேர்வு, அவர்களிடம் இயக்குனர் வாங்கிய வேலை குறித்து பத்து பக்கங்களுக்கு எழுதலாம்.
7. ஒத்த செருப்பு: வித்தியாசமான முயற்சியை செய்துள்ள ரா.பார்த்திபனின் இந்த படத்திற்கு ஆஸ்காரை விட பெரிய விருது ஏதாவது இருந்தால் அதை நிச்சயம் கொடுக்க வேண்டும். ஆனால் ஆஸ்காருக்கே தேர்வு செய்யப்படாதது, ஆஸ்கார் விருதுக்குத்தான் இழப்பு. ஒரே ஒரு ஆளாக பார்த்திபன் இந்த படத்தை அசத்தியிருப்பார். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
8. சம்டைம்ஸ்: இயக்குனர் பிரியதர்ஷனின் அருமையான படைப்பு. ஒரு மருத்துவமனையில் எய்ட்ஸ் டெஸ்ட்டுக்காக வரும் சிலரின் உணர்வுகள் இந்த படம். எய்ட்ஸ் டெஸ்ட்டின் முடிவு வரும்போது ஒவ்வொருவரின் முகத்தில் தெரியும் பரபரப்பு, கடைசியில் பிரகாஷ்ராஜூக்கு நேரும் முடிவு, யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ் ஆகியவை படத்தின் ஹைலைட்ஸ்.
9. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்: ஒரு படத்தை இவ்வளவு ஜாலியாக கொஞ்சம் கூட போரடிக்காமல் அதில் ஒரு மெசேஜும் சொல்ல முடியும் என்றால் அதற்கு சமீபத்திய உதாரணம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் தான். பெரிய எதிர்பார்ப்பு இன்றி வெளியாகி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த படம். துல்கர் சல்மான், ரிதுவர்மா, ரக்சன், நிரஞ்சனி, கவுதம் மேனன் என சரியான நட்சத்திர தேர்வே இந்த படத்தின் வெற்றியை 90% உறுதி செய்துவிட்டது.
10. விசாரணை: லாக்கப்பில் என்ன நடக்கும் என்பது பலர் கேள்விப்பட்டிருந்தாலும் இந்த படம் நாமே லாக்கப்பில் இருந்து அடி வாங்குவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். வெற்றி மாறனின் இயக்கம், ஜிவி பிரகஷின் பின்னணி இசை, தினேஷின் நடிப்பு ஆகியவைகளுக்காக இந்த படத்தை ஏற்கனவே பார்த்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout