10 பைசாவுக்கு பிரியாணி: தனிமனித இடைவெளியை மறந்த பொதுமக்கள்!
- IndiaGlitz, [Sunday,October 11 2020]
இன்று உலக பிரியாணி தினம் கொண்டாடப்படுவதை அடுத்து இந்த தினத்தை கொண்டாடும் வகையில் திருச்சியில் உள்ள பிரியாணி கடை ஒன்று பத்து பைசாவுக்கு பிரியாணி என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. மேலும் முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டுமே பத்து பைசா பிரியாணி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இன்று அதிகாலை 4 மணி முதலே அந்த கடையின் முன் நீண்ட வரிசையில் கையில் பத்து பைசாவுடன் காத்திருந்தனர்.
கடை திறக்கப்பட்டவுடன் பத்து பைசாவை கொடுத்து பிரியாணியை வாங்க பொதுமக்கள் முண்டியடித்தனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது என்பதும் 5 நபர்களுக்கு மேல் ஒரு இடத்தில் கூடக்கூடாது என்று விதிகள் இருந்தும், அந்த விதியையும் மீறி தனிமனித இடைவெளியையும் காற்றில் பறக்கவிட்டு 10 பைசாவுக்கு பிரியாணி வாங்குவதற்காக 500-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறிய போது ’பழங்கால நாணயங்களை சேகரிக்கும் வழக்கத்தை ஊக்குவிப்பதற்காக இந்த சலுகையை வழங்கியதாகவும் நாங்கள் 100 பேருக்கு மட்டுமே அறிவித்திருந்த நிலையில் 500 பேருக்கு மேல் வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் அடுத்த ஆண்டு இதை விட இன்னும் அதிக நபர்களுக்கு 10 பைசாவுக்கு பிரியாணி வழங்க ஏற்பாடு செய்வோம்’ என்றும் அவர் தெரிவித்தார்