நடிகர் மாதவன் பற்றி நீங்கள் அறியாத 10 சுவாரசியத் தகவல்கள்!
- IndiaGlitz, [Tuesday,June 01 2021]
நடிகர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகர் மாதவன் தற்போது இயக்குநர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். அவர் இயக்கி நடித்துவரும் “ராக்கெட்ரி நம்பி வளைவு“ திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த டி.ஒய்.பட்டீல் கல்லூரி நடிகர் மாதவனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறது.
சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு முன்பாக இவர் பல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். “பனேகி அப்னி பாத்” எனும் தொடரில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு “இஸ் ராத் கி சுபாக் நகின்” எனும் இந்தி திரைப்படத்தில் அடையாளமே தெரியாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இந்தி தொலைக்காட்சித் தொடர்களும், சினிமாவும் கைவிட்ட நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு “இன்பெர்னோ“ எனும் ஆங்கிலத் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அதைத் தொர்ந்து இயக்குநர் சிகரம் மணிரத்னம் இயக்கிய “அலைபாயுதே” திரைப்படத்தில் நடித்து தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.
தமிழில் “அலைபாயுதே”, “மின்னலே” போன்ற ஆரம்ப சினிமாவில் சாக்லெட் பாயாக வந்த இவரை ரசிகர்கள் “மேடி“ என பாசத்தோடு அழைத்து வந்தனர். பின்னர் “கன்னத்தில் முத்தமிட்டால்”, “அன்பே சிவம்”, “இறுதிச்சுற்று”, “விக்ரம் வேதா” போன்ற திரைப்படங்கள் மூலம் சாக்லேட் பாய் அவதாரத்தை எல்லாம் தாண்டி, கதையம்சத்திற்கு ஏற்ற சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதைத்தவிர பல நேரங்களில் கதாநாயகன் என்ற அடையாளத்தைக் கூட துறந்து விட்டு நடிகர் மாதவன் கதைக்காக எந்த வேடத்திலும் நடிக்கும் ஒரு தேர்ந்த நடிகராக இவர் வலம் வருகிறார்.
சமீபத்தில் தமிழில் இவர் நடிப்பில் “மாறா” திரைப்படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. அதற்கு முன்பு வெளியான “சைலன்ஸ்” திரைப்படம் இவருக்கு பெரிய வெற்றியாக அமைந்தது.
இந்தியில் இவர் நடித்த “ரங் தெ பசந்தி”, நடிகர் அபிஷேக் பச்சனுடன் “குரு”, நடிகர் அமீர்கானுடன் “3 இடியட்ஸ்” போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.ஹ
நடிகை கங்கனா ரனாவத்துடன் இணைந்து “தனு வெட்ஸ் மனு” திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்தத் திரைப்படத்தில் நடிகை கங்கனாவிற்கு வெயிட்டான கதாபாத்திரம் எனத் தெரிந்தும் கதைக்காக தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
நடிகர் மாதவன் முதலில் இந்தி சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இவரது தந்தை தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 1970 ஜுன் 1 ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஜெட்பூரில் பிறந்தார். தந்தை டாட்டா ஸ்டீல் நிறுவனத்திலும் தாய் சரோஜா இந்தியன் வங்கியில் வேலைப்பார்த்துக் கொண்டு இருந்தனர். இன்றைக்கு அவருடைய பிறந்த நாள் என்பதும் ஒரு கூடுதல் சிறப்பு.