அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் பயங்கர தீவிபத்து: 10 குழந்தைகள் பரிதாப பலி
- IndiaGlitz, [Saturday,January 09 2021]
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டாரா என்ற மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை சுமார் 2 மணிக்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் 7 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், அந்த குழந்தைகளுக்கு தற்போது தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டாரா என்ற மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் நள்ளிரவு 2 மணிக்கு திடீரென தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரோடு தீயில் கருகி பலியாகியுள்ளனர்.
இந்த தீ விபத்து நேரிட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அரசு மருத்துவமனையில் 10 பச்சிளம் குழந்தைகள் தீ விபத்தில் பலியாகியுள்ள சோகச்சம்பவம் மகாராஷ்டிராவை மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.