2019-ம் ஆண்டில் அதிக பணம் சம்பாதித்த நபர்கள்... உலக அளவில் அம்பானி முதலிடம்..!
- IndiaGlitz, [Tuesday,February 25 2020]
உலகெங்கிலும் உள்ள கோடீஸ்வரர்களில் அதிக அளவில் சொத்துகளை சம்பாதித்தவர்கள் மற்றும் இழந்தவர்களின் பட்டியலை 'ஃபோர்ப்ஸ்' நாளிதழ் வெளியிட்டுள்ளது. 2019-ம் ஆண்டின் சொத்து மதிப்பு 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்களும் உள்ளனர்.
அதிகம் இழந்தவர்களின் பட்டியலில், ஸால் ஸ்மார்ட் வர்த்தகக் குழுமத்தின் நிறுவனர் யான் ஸி முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய நிகர சொத்துமதிப்பு, 3 பில்லியன் டாலர் அளவு குறைந்துள்ளது. டிசம்பர் 2019 நிலவரப்படி, இவருடைய நிகர சொத்து மதிப்பு 12.1 பில்லியன் டாலர். இரண்டாவது இடத்தில் ஊபரின் இணை நிறுவனர் டிராவிஸ் கலானிக் இருக்கிறார். இவருடைய நிகர சொத்து மதிப்பு 13.1 பில்லியன் டாலர் குறைந்திருக்கிறது. நிகர சொத்து மதிப்பு 82.8 பில்லியன் டாலர்.
எசெல் குழுமத்தின் முன்னாள் தலைவர் சுபாஷ் சந்திரா மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவருடைய நிகர சொத்து மதிப்பு குறைந்த அளவு, 43.4 பில்லியன் டாலர். நிகர சொத்து மதிப்பு 60,660 மில்லியன் டாலர். இவர்களைத் தொடர்ந்து அமேசானின் நிறுவனர் ஜெப் பெஸோஸ், நான்காவது இடத்திலும் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி, 5-வது இடத்திலும் இருக்கிறார்கள்.
அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார். இவருடைய நிகர சொத்து மதிப்பு 16.1 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. டிசம்பர் 2019 நிலவரப்படி நிகர சொத்து மதிப்பு 61.4 பில்லியன் டாலராக இருக்கிறது. இரண்டாவது இடத்தில் லாஸ் ஏஞ்செலஸ் கிளிப்பர்சின் நிறுவனர் ஸ்டீவ் பால்மேர் இருக்கிறார். இவருடைய நிகர சொத்து மதிப்பு உயர்ந்த அளவு 16.3 பில்லியன் டாலர். இவருடைய நிகர சொத்து மதிப்பு 56.3 பில்லியன் டாலர்.
3-வது இடத்தில் இண்டி டேக்சின் நிறுவனர் அமான்சியோ ஆர்டிகா இருக்கிறார். நிகர சொத்து மதிப்பு உயர்ந்த அளவு 17.3 பில்லியன் டாலர். டிசம்பர் 2019 நிலவரப்படி நிகர சொத்து மதிப்பு 74.9 பில்லியன் டாலர். இவருக்கு அடுத்த 4-வது இடத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் மற்றும் 5-வது இடத்தில் லூயிஸ் விட்டனின் தலைவர் பெர்னால்ட் அர்னால்ட் இருக்கிறார்கள்.