20 திருக்குறள் ஒப்பித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்? சுவாரசியமான அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,February 12 2021]

20 திருக்குறள் ஒப்பித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பை கரூரில் இயங்கிவரும் ஒரு தனியார் பெட்ரோல் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்காக அறிவிக்கப்பட்டு உள்ள இந்த இலவசத்தால் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

கரூர் பகுதியில் வசித்துவரும் திருக்குறள் பற்றாளரான செங்குட்டுவன் ஏற்கனவே வள்ளுவர் பெயரில் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நடத்தி வருகிறார். மேலும் வள்ளுவர் பெயரில் உணவகத்தையும் இயக்கி வருகிறார். அவருடைய பெட்ரோல் ஏஜென்சியில்தான் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. வாசிப்பு குறைந்து போய் இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் வள்ளுவரையும் இலக்கியத்தையும் பெரும்பாலான மாணவர்கள் ஒதுக்கியே வைத்து விட்டனர்.

இதனால் மாணவ, மாணவிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செங்குட்டுவன் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதன்படி பல மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களை அழைத்து வந்து திருக்குறளை ஒப்பித்து பெட்ரோலை இலவசமாகப் பெற்று செல்லுகின்றனர். மேலும் 1,330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்பிக்கும் மாணவர்களுக்கு வள்ளுவன் கல்லூரியில் இலவசமாக பட்டப் படிப்பும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பெட்ரோல் விற்கும் விலையில் இலவச பெட்ரோல் அறிவிப்பு பலருக்கும் பயன்பட்டு வருவதோடு மாணவர்களுக்கு இது உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.