மோசமான வானிலை காரணமாக நேற்று விண்வெளிக்கு அனுப்பவிருந்த அமெரிக்கா விண்கலம் நிறுத்தப் பட்டது!!!
- IndiaGlitz, [Thursday,May 28 2020]
அமெரிக்காவின் தனியார் நிறுவனமான SpaceX நிறுவனம் தயாரித்த விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர்கள் இரண்டு பேர் நேற்று, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட இருந்தனர். இதையடுத்து கடந்த 2011 க்கு பிறகு அமெரிக்க விண்வெளித் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையை புரியப் போகிறது என சர்வதேச ஊடகங்கள் செய்தியை வெளியிட்டு வந்தன. இந்நிகழ்விற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் நேரில் சென்று இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விண்கலம் பொருத்தப்பட்ட ராக்கெட்டானது கவுன்டவுன் தொடங்கிய நிலையில் கடைசி 16 நிமடங்கள் இருந்தபோது அந்த ராக்கெட் நிறுத்தப்பட்டது. இதற்கு மோசமான வானிலையே காரணம் எனவ SpaceX நிறுவனத்தின் சார்பாக அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. ஒரு தனியார் நிறுவனம் தயாரித்த முதல் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர்கள் பறக்க இருப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. மிகவும் மலிவான விலையில் SpaceX நிறுவனம் விண்கலங்களைத் தயாரித்து தருவதாகவும் தற்போது இந்நிறுவனம் உருவாக்கி விண்ணிற்கு அனுப்ப இருக்கும் விண்கலம் ரஷ்ய தயாரிப்பை விட மிகவும் விலை குறைவு எனவும் கூறப்பட்டு வருகிறது. கடைசி 16 நிமிடங்களில் நிறுத்தப்பட்ட இந்த விண்கலம் வானிலை சரியாகும் பட்சத்தில் வரும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் அனுப்பப்படும் எனவும் அறிக்கை வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவின் இந்த செயல்திட்டம் குறித்து தற்போது சர்வதேச அளவில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.