கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு ஏன் அவசியம்??? சிறு அலசல்!!!
- IndiaGlitz, [Tuesday,March 24 2020]
உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் தங்களுடைய மக்களை வெளியே வரவேண்டாம் என்று கடுமையான தடை உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. இதற்கு முன்பும் எபோலா, சார்ஸ், மெர்ஸ், நிபா, பறவைக் காய்ச்சல் என பல நோய்கள் மக்களைத் தாக்கி இருக்கின்றன. ஆனால் அப்போது இருந்ததை விடவும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏன் இத்தனை அவசியமாகத் தனிமைப்படுத்தல் தேவைப்படுகிறது???
சொல்லப்போனால், முன்பு பரவிய வைரஸ்களைவிட இந்த கொரோனா நாவல் வைரஸ்க்கு அதிக ஆற்றல் இல்லை. ஆனால் எதற்கு இத்தனை பதட்டம், தனிமைப்படுத்தல் தேவைப்பபடுகிறது? பெரும்பாலும் வைரஸ் நோய் கிருமிகள் ஒருவரிடமிருந்து மற்றவகளுக்கு நோய் பரப்பும் தன்மைக் கொண்டது. ஏன் தட்டம்மையை எடுத்துக்கொள்ளுவோம். அதன் பரவல் தன்மை சுமார் 100 மீட்டர் வரை இருக்குமாம். காற்றில் பரவும் தன்மையுள்ள இந்த வைரஸ்கிருமி பல மணிநேரங்கள் உயிருடன் வாழும் தன்மைக்கொண்டது. ஆனால் இந்த புதிய கொரோனா வைரஸ் காற்றில் பரவும் போது அதிகப்பட்சம் 3 மணிநேரம் மட்டுமே வாழும் தன்மைக் கொண்டது.
வெறுமனே காற்றில் 3 மணிநேரம் வாழும் தன்மைக்கொண்ட கொரோனா வைரஸ் கிருமிக்கு ஏன் இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமா என்றால் கட்டாயம் அவசியம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் ஒருவரின் உடலில் பரவும் கொரோனா வைரஸ் குறைந்தது 14 நாட்கள் தங்கி வாழும் தன்மைக்கொண்டது. அதோடு வைரஸ் தொற்று ஏற்பட்டவரை தனிமைப்படுத்தி மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். தனிமைப்படுத்தும்போது அவருக்கு குறைந்த பட்சம் 6 அடி தூரம் தள்ளி இருக்கும் வகையில் பாதுகாப்பான சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும்.
மேலும், கொரோனா ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவிக்கொண்டே இருந்தால் பாதிப்பு கொத்துக் கொத்தாக இருக்கும். கொத்துக் கொத்தாக பாதிக்கப்படும் மக்களை தனிப் பாதுகாப்பு அறைகளில் வைத்து சிகிச்சை அளிப்பது என்பது அரசுக்கு கடினமாக காரியமாக மாறிவிடும். இந்தியா முழுவதும் 1 லட்சம் மருத்துவப் படுக்கைகள் மட்டுமே இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. இதிலும் அதிகப்பட்சமாக தமிழ்நாட்டில் தான் மருத்துவமனை படுக்கைகள் இருக்கின்றன.
ஏற்கனவே அந்த மருத்துவமனைகளில் வேறு நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள் இருப்பார்கள். இந்நிலையில் புதிதாக நோய்தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு படுக்கைகளை ஒதுக்குவதில் சிரமம் ஏற்படலாம். மேலும், கொரோனா சிகிச்சை படுக்கைகள் தனிமைப்படுத்தப் பட்ட அறைகளாக இருக்க வேண்டும். எனவே அதற்குத் தேவைப்படும் இடவசிதியும் சற்று அதிகம்.
கொரோனா நோய்தொற்று ஏற்பட்டு சீனாவில் இதுவரை 73,159 பேர் நல்ல முறையில் வீடு திரும்பியுள்ளனர். மேலும், அந்நாட்டில் 5 லட்சம் மக்கள் வரையில் அறிகுறிகள் இருப்பதாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இப்படி இருக்கும்போது கொரோனா பாதிப்பினால் உடனே மரணம் நிகழ்ந்துவிடும் எனவே வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என ஒரு அரசு மக்களை எப்போதும் அச்சுறுத்தவும் செய்யாது. மக்கள் சமூகத்துடன் நேரடித் தொடர்பில் நெருங்கி வாழும்போது நோய்தொற்று விகிதம் அதிகமாகும். அதிகமாகும் நோய்த்தொற்று மேலும் பரவி பெரும் ஆபத்தையும் விளைவிக்கலாம்.
சங்கிலித் தொடர் தடை
பரவும் விகிதம் சங்கிலித்தொடர் போல அமையும் தன்மைக் கொண்ட கொரோனாவை ஒவ்வொருவராக பின்வாங்கி, நோயில் இருந்து தப்பித்து விட்டால் தொடர் இணைப்பில் உள்ள மற்றவர்களுக்கு பரவாது. பெரும்பாலும் இந்தியாவில் நோய் தொற்றினால் பாதிக்கப் பட்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே. இந்தச் சங்கிலித் தொடரை அவர்களோடு நிறுத்திக் கொண்டால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும்.
ஊரடங்கு உத்தரவு
மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியபடி கிருமித்தொற்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். இப்படி சமூக இயக்கத்தைத் தடை செய்யும்போது நோய்ப்பரவலைத் தடை செய்யமுடியும். ஒருவேளை வெளியே செல்ல நேர்ந்தால் ஒருவரிடமிருந்து 1 அடி தூரம் தள்ளியே இருக்க வேண்டும். பாதுகாப்பான முகக்கவசம், கிருமிநாசினிப் பொருட்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும். இருமல், சளி, காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நலம். மேலும், அதீத அறிகுறிகள் தென்பட்டால் கொரோனா சோதனை மேற்கொள்ளவும் தயங்கக்கூடாது.
1918 வாக்கில் பரவிய ஃப்ளூ காய்ச்சல் உலகம் முழுக்க பல கோடி மக்களை காவு வாங்கியது. இந்தியாவில் மட்டும சுமார் 12-17 மில்லியன் மக்கள் இந்தக் காய்ச்சலால் உயிரிழந்தனர். அன்றைய மக்கள் தொகையில் இது 5% என்பதும் குறிப்பிடத் தக்கது. அன்றைக்கு நோய்பரவும் விதம் குறித்தும், முறையான மருத்துவம் இல்லாததாலும் இழப்புகள் ஏற்பட்டன. பல்வேறு நவீனக் கண்டுபிடிப்புகள், முறையான தொலைத் தொடபுகள் இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் ஒரு பெரிய நோய்த்தொற்றுக்கு உயிர்களை இழக்க நேரிட்டால் அது மனித சமூகத்தின் இயலாமையையே காட்டும். எனவே நோய்த் தொற்றில் இருந்து நம்மை விலக்கி வைப்போம். அதே நேரத்தில் சமூகத்தையும் சற்று விலக்கி வைப்போம்.