கொரோனா காலத்தில் கோவிலை மட்டும் ஏன் திறக்குறீங்க… இந்த ஒரு கேள்விக்கு மரணத் தண்டனையா???
- IndiaGlitz, [Wednesday,November 11 2020]
கொரோனா காலத்தில் வழிபாட்டு தலங்கள் மட்டும் திறந்திருப்பது ஏன் எனக் கேள்விகேட்ட தடகள வீரருக்கு மரணத்தண்டனை விதிக்கப்படலாம் என்ற அதிர்ச்சி தகவலை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொரோனா தாக்கத்தால் அல்லாடி வருகின்றனர். இந்நிலையில் ஈரானில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து ஜிம்களும் மூடிக் கிடக்கின்றன. ஆனால் வழிபாட்டுத் தலங்கள் மட்டும் திறக்கப்பட்டு இருக்கிறது.
ஈரானில் நிலவிவரும் இந்நிலைமையை ஊனமுற்ற தடகள வீரர் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் கைது செய்யப்பட்ட அந்த வீரருக்கு விரைவில் மரணத்தண்டனை பிறப்பிக்கப்படலாம் என்ற சந்தேகத்தை ஊடகங்கள் வெளியிட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
ஈரான் நாட்டைச் சார்ந்த பாடிபில்டர் ரேஸா தப்ரிஸி. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நியூசிலாந்து பாரா ஒலிம்பிக்கில் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புனித நகரமான மஷாத்தில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜிம்களை மூடுவது வேடிக்கையானது எனத் தெரிவித்து இருந்தார்.
இந்தப் பதிவைத் தொடர்ந்து ரேஸா தப்ரிஸி சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டார் எனக் கூறி அந்நாட்டு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். தன் மீது கைது நடவடிக்கை தொடர்ந்த உடனேயே ரோஸா தப்ரிஸி தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கோரி பொது வெளியில் அறிக்கையும் வெளியிட்டார். ஆனால் அரசாங்கத்தைப் பொறுத்த வரை இந்த மன்னிப்பு எல்லாம் அந்நாட்டு செல்லாது. அவருக்கு உறுதியாக மரணத்தண்டனை விதிக்கப்படும் என ஊடகங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றன.