தனிஉரிமையே பறிபோகும்? இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி வழக்கு!
- IndiaGlitz, [Thursday,May 27 2021]
மத்திய அரசின் சட்டவிதிகள் பயனாளிகளின் (அதாவது இந்திய மக்களின்) தனி உரிமையை பாதிக்கும் விதமாக இருக்கிறது என்று கூறி வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் நேற்று புதிய வழக்கு ஒன்றை தொடுத்து இருக்கிறது.
இந்தியாவில் செயல்படும் வாட்ஸ்அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் அனைத்திற்கும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை வகுத்து மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க 3 மாதகால அவகாசத்தையும் வழங்கி இருந்தது.
அதன்படி மே 25 ஆம் தேதியோடு மத்திய அரசு வழங்கிய காலக்கெடு முடிந்து விட்டது. ஆனால் இந்தியாவில் செயல்படும் பெரும்பாலான சமூக ஊடகங்கள் இந்த விதிமுறைகளை ஏற்காமல் இருக்கின்றன. இந்நிலையில் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் இரண்டும் மத்திய அரசின் விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதாக சம்மதம் தெரிவித்து இருக்கின்றன. ஆனால் வாட்ஸ்அப், சிக்னல், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற நிறுவனங்கள் இதுகுறித்து அதிருப்தியைக் காட்டி வருகின்றன.
அதோடு வாட்ஸ்அப் நிறுவனம் இந்த விதிமுறைகளுக்கு எதிராக ஒரு வழக்கையும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுத்து இருக்கிறது. அதில் மத்திய அரசின் சட்டவிதிகள் பயனாளிகளின் (அதாவது இந்திய மக்களின்) தனி உரிமையை பாதிக்கும் விதமாக இருக்கிறது என்று கூறி வழக்குத் தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அரசும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பித்து இருக்கிறது.
இதற்கிடையில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் தொடர்பாக மத்திய அமைச்சகம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் “வழிகாட்டுதல்களுக்கு எதிராக வாட்ஸ்அப் கடைசி நேரத்தில் வழக்கு தொடுத்து இருப்பது துரதிஷ்டவசமானது. இது விதிமுறைகளை நடைமுறைப் படுத்துவதைத் தடுப்பதற்கான முயற்சி ஆகும். தனி உரிமையை அரசு அடிப்படை உரிமை என்று அங்கீகரிக்கிறது. அதை தனது குடிமக்களுக்கு உறுதிப்படுத்துவதில் உறுதியாக உள்ளது” என விளக்கம் அளித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சமூக ஊடக நிறுவனங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையே கருத்துப்போர் நடைபெறுவதற்கான சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.