என்ன நடக்கிறது மத்தியப் பிரதேச சட்ட சபையில்???
- IndiaGlitz, [Monday,March 16 2020]
கடந்த 2008 டிசம்பரில் மத்தியப் பிரதேச சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 114 இடங்களை வென்றது. 2 பகுஜன் சமாஜ், 1 சமாஜ்வாடி, 4 சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இம்மாதம் மார்ச் 11 ஆம் தேதி அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்கள் 22 பேருடன் அக்கட்சியில் இருந்து விலகியதை நாடே உற்றுப் பார்த்தது.
இச்சம்பவம், மத்தியில் 2 பெரிய கட்சிகளுக்குமான போராகவே பார்க்கப் பட்டது. மேலும், தனது கட்சி உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்திற்குக் காரணம் பா.ஜ.க தான் என்று காங்கிரஸ் கட்சி விமர்சனமும் செய்தது. காங்கிரஸ் கட்சியிடம் தனது விலகல் கடிதத்தை கொடுத்த ஜோதிராதித்ய சிந்தியா ஒருநாள் கழித்து பாஜகவில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் அம்மாநில சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் பட்டு யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் கிளம்பியது. இதற்கான முன்னெடுப்புகளை பா.ஜ.க மேற்கொள்ளும் பட்சத்தில் காங்கிரஸ் அதை எவ்வாறு எதிர்க்கொள்ளும் என்ற கேள்வியும் இருந்து வந்தது.
சனிக்கிழமை நள்ளிரவில் முதல்வர் கமல்நாத், ஆளுநரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தனது கட்சி எம்எல்ஏக்களை பா.ஜ.க சிறை வைத்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை நிரூபிக்க அவகாசம் அளிக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் ஆளுநர் நம்பிகை வாக்கெடுப்பை திங்கட்கிழமையே நிரூபிக்குமாறு உத்தரவிட்டார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த கமல்நாத் நம்பிக்கை வாக்கெடுப்புக்குச் சபாநாயகர் அழைப்பு விடுப்பார் என்று கூறியிருந்தார். மேலும், சட்டசபை நடவடிக்கைகள் சீராக நடைபெற வேண்டும் என்று ஆளுநர் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் கமல்நாத் தெரிவித்தார்.
பா.ஜ.க. வின் அம்மாநில கொறடா ஞாயிற்றுக்கிழமை அன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களிக்குமாறு தனது எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டது. அப்போது பா.ஜ.க எம்எல்ஏக்கள் அனைவரும் குருக்கிராமில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கி இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
மத்தியப் பிரதேச சட்டசபையில் இனறு பட்ஜெட் கூட்டத் தொடருக்கான தொடக்க உரையில் ஆளுநர் லால்ஜி டாண்டன் கலந்து கொண்டு பேசினார். அதில் “அரசியலமைப்பைப் பின்பற்றுங்கள், மேலும், சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்” என்று பேசினார். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்ட சபை நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து மார்ச் 26 ஆம் தேதி வரை சட்டப் பேரவை ஒத்தி வைக்கப் பட்டது.
இதையடுத்து, முதல்வர் கமல்நாத் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கை தம்மிடம் இருப்பதாகவே கூறி வருகிறார். சட்ட சபை எண்ணிக்கையில் 2 இடம் காலியாக இருக்கிற நிலையில் 22 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து இருக்கின்றனர். மொத்தமுள்ள 230 சட்ட மன்ற உறுப்பினர்களில் தற்போது பாஜக தரப்பில் 107 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர்.
முன்னதாக, பா.ஜ.க வுக்கு பெரும்பான்மை இருக்கிறது, எனவே விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்து இருந்தார். மேலும், ஆளுநரிடமும் இவர் கோரிக்கை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இன்று சட்டசபைக்கு பா.ஜ.கவின் 106 எம்.எல்.ஏக்கள் வருகை தந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தற்போது, சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பா.ஜ.கவின் 10 எம்எல்ஏக்கள் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடுத்துள்ளனர். அதில், மத்தியப் பிரதேசத்தில் இன்னும் 24 மணி நேரத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
காங்கிரஸ் தனது 22 எம்.எல்.ஏக்களின் ஆதரவினை இழக்கும் பட்சத்தில் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 92 ஆக குறையும் என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போது ராஜினாமா செய்யப் பட்ட 22 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடித்தத்தில் 6 கடிதம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப் பட்டு இருக்கிறது. எனவே சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 222 ஆக குறைந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
மொத்தமுள்ள 22 எம்எல்ஏக்களின் விலகல் கடிதமும் ஏற்றுக்கொள்ளப் படுமானால் சட்ட மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 206 ஆக குறையும். 206 என்ற கணக்கில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் படும் போது பா.ஜ.க எளிதாக வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றன.
இன்று நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்ட சபையில் நடந்த குழப்பமான சூழலில் குறைந்த நேரமே ஆளுநர் பேசினார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும், அம்மாநில முதலமைச்சர் கமல்நாத், “நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து பேரவைத் தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும்“ என்று ஆளுநருக்கு கடிதத்தையும் எழுதி இருக்கிறார். மார்ச் 29 ஆம் தேதி வரை சட்டசபை ஒத்தி வைக்கப் பட்டுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் தொடுத்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.