நிர்பயாவுக்கு நடந்தது என்ன??? வழக்குகள், தண்டனை குறித்த ஒரு தொகுப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லியில் 16, டிசம்பர் 2012 அன்று குளிர்ந்த இரவு நேரத்தில் 23 வயது பிசியோதெரபி மருத்துவம் படிக்கும் மாணவி நிர்பயா, அவரது நண்பர் பாண்டே இருவரும் “Life of Pi'' படம் பார்த்து விட்டு பேருந்தில் வருகின்றனர். பேருந்து முன்ரிகர் பஸ் நிலையத்தை வந்தடைகிறது. பேருந்தில் இவர்கள் இருவரையும் தவிர்த்து பஸ் டிரைவர் உட்பட 6 பேர் இருந்தனர். பேருந்து வழக்கமாக செல்லாத ஒரு திசையை நோக்கி செல்கிறது. ஏதோ தவறாக இருக்கிறது என நிர்பயா சொல்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்த நண்பர் பாண்டே அடுத்த கணமே கீழே தள்ளப்படுகிறார். கடுமையாகத் தாக்கப்படுகிறார். ஒரு இரும்பு கம்பியைக் கொண்டு நிர்பயாவை முதலில் தாக்குகின்றனர். பின்பு அவர் பேருந்தின் பின்புறம் இழுத்துச் செல்லப்படுகிறார். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பல முறை நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப் படுகிறார்.
குற்றவாளிகளில் ஒருவரான 17 வயது சிறுவன் ஒரு இரும்பு கம்பியை எடுத்து வருகிறார். அந்தக் கம்பியை நிர்பயாவின் பிறப்பு உறுப்பில் சொருகி அவரது குடல் முழுவதும் துளைக்கப்படுகிறது. பேருந்தில் இது நடந்து கொண்டிருக்கும்போதே பேருந்து ஓட்டுநரான ராம் சிங் பேருந்தை விட்டு இறங்கி ஓடுகிறார்.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு அவர்கள் இருவரும் பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசப்படுகின்றனர். பாதி இறந்து கிடந்த நிலையில் அவ்வழியாகச் சென்ற ஒருவர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கிறார்.
இருவரும் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு நிர்பயாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 5 சதவீத குடல்கள் மட்டுமே மிச்சம் இருப்பதை கண்டுபிடிக்கின்றனர். நிர்பயா சிங்கப்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் படுவதற்கு முன்பு காவல் துறை அவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்கிறது.
நிர்பயா தனது வாக்குமூலத்தில், தனக்கு கொடுமை செய்த 6 பேரையும் எளிதாக விட்டுவிடக் கூடாது, கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் என காவல் துறையினரைக் கேட்டுக்கொள்கிறார்.
நிர்பயாவின் வழக்கு தற்போது இந்தியாவில், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் சட்டங்களை மாற்றுவதற்கு பெரிய கருவியாகவே செயல்பட்டு இருக்கிறது. பெண்களின் பாதுகாப்பையும் பெண்கள் மீதான குற்றங்களையும் களைவதற்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் வேண்டும் என்பதை நிர்பயா வழக்கு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி உள்ளது.
நிர்பயா பெயர்காரணம்
இந்தியாவில் கடைபிடிக்கப் படும் கற்பழிப்புச் சட்டங்கள், பாதிக்கப் பட்டவர்களின் பெயர்களை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. எனவே நிர்பயா என்ற பெயர் அவருக்கு வழங்கப்பட்டது. நிர்பயா என்றால் அச்ச மற்றவர் என்று பொருள்படும். நிர்பயா இறந்த பின்பு 2013 இல் அவருக்கு அமெரிக்க வெளியுறவுத் துறையின் தைரியத்திற்கான விருதும் வழங்கப் பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.
வழக்கின் குற்றவாளிகள்
முதலில் பேருந்து ஓட்டுநர் ராம்சிங் 2010 டிசம்பர் 17 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து அவரது சகோதரரான முகேஷ் சிங், ஜிம்மில் பயிற்சியாளராகப் பணயாற்றிய வினய் சர்மா, பழ வியாபாரம் செய்துவந்த பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்சய் குமார் சிங், 17 வயதான சிறுவன் அனைவரும் கைது செய்யப் படுகின்றனர்.
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா டிசம்பர் 29, 2012 இல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. வழக்கில் மற்ற குற்றவாளிகளான அக்சய் குமார் சிங், பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா ஆகிய நான்கு பேருக்கும் 2013 செப்டம்பர் 13 ஆம் தேதி மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
வழக்கில் 17 வயது குற்றவாளியான சிறுவன், சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டுகாலம் இருக்கவேண்டும் என சிறார் நீதி வாரியம் உத்தரவிடுகிறது. எனவே சிறுவர் சீர்த்திருத்த மையத்திற்கு கொண்டு செல்லப் படுகிறார்.
குற்றவாளிகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கின்றனர். அதையடுத்து அவர்கள் திகார் சிறையில் அடைக்கப் படுகின்றனர். 2013 மார்ச் 11 அன்று வழக்கின் முக்கிய குற்றவாளியான ஓட்டுநர் ராம் சிங் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். டெல்லி, உயர்நீதிமன்றம் 2014 மார்ச் 13 அன்று 4 பேருக்கும் விதிக்கப் பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்கிறது.
அடுத்து, குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர். எனவே வழக்கு நிலுவையில் இருப்பதால் தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப் படுகிறது. 2017 இல் உச்ச நீதிமன்றம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை ஒப்புக்கொள்கிறது. எனவே தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடுகிறது உச்சநீதிமன்றம்.
ஜனவரி 22 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற பிடிவாரண்ட் பிறப்பிக்கப் படுகிறது. தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை துறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. முதலில் முகேஷ் சிங் தனது கருணை மனு நிலுவையில் இருக்கிறது எனவே தண்டனையை நிறைவேற்றக் கூடாது என டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்கிறார்.
கருணை மனுவைக் காரணம் காட்டி வழக்குத் தொடரப்பட்ட நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்கிறது. அடுத்து வினய் சர்மா, பவன் குப்தா என்று ஒவ்வொரு வராக வழக்குத் தொடுக்கின்றனர். நால்வரின் கருணை மனுக்களை டெல்லி ஆளுநர், இந்திய குடியரசு தலைவர் என இருவரும் நிராகரித்த நிலையில் தனது தண்டனையை குறைக்க வேண்டும் எனவும் மனு அளிக்கின்றனர். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
ஜனவரி 22, பிப்ரவரி 1, மார்ச் 3 என்று 3 முறை பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டு தண்டனை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை குற்றவாளிகள் உருவாக்குகின்றனர். மார்ச் 20 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கான பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்ட நிலையில் ஒருவரின் மனைவி விவகாரத்து கேட்டு வழக்குத் தொடுக்கிறார்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்காடிய ஏ.பி.சிங் இரண்டாவது முறை கோரப்பட்ட கருணை மனு நிலுவையில் இருப்பதால் தண்டனையைத் தள்ளி வைக்குமாறு நேற்றும் வழக்குத் தொடுக்கிறார். இந்த வழக்கின் விசாரணை நேற்று இரவு முழுவதும் நீண்டு சென்று, வழக்குக் கடைசியில் அதிகாலை 2.30 மணிக்கு தள்ளுபடி செய்யப் பட்டது.
நேற்று முதலே திகார் சிறை துறையில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வந்தன. கைதிகள் 4 பேரையும் தனித்தனி அறைகளில் வைக்கப் பட்டதாகவும் அவர்களுக்குக் கொடுக்கப் பட்ட உணவை அவர்கள் உண்ணவில்லை என்றும் செய்திகள் வெளியாகின. கடைசியாக அவர்களது குடும்பத்தை பார்க்க வேண்டும் என விரும்பிய நிலையில் அதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப் படவில்லை என்றும் கூறப்படுகிறது.
பல போராட்டங்களுக்குப் பின்னர் கூட்டுப் பாலியல் செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் இன்று காலை 5.30 மணிக்கு தூக்கிலடப் பட்டனர். 7 வருடங்களாக நடந்த வழக்கின் ஒவ்வொரு தருணத்திலும் வருத்தம் தெரிவித்த நிர்பயாவின் தாய் தற்போது கண்ணீர் வடித்த படியே “அவளை பத்திரப்படுத்த தவறிவிட்டேன். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்து ஆன்மா சாந்தியடை வழி செய்துவிட்டதாக” தெரிவித்து உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments