மெக்கா செல்ல விரும்பும் பயணிகளுக்கு விசா வழங்கல் நிறுத்தம்
- IndiaGlitz, [Friday,February 28 2020]
சவுதி அரேபியா அரசு மெக்கா செல்லும் பயணிகளுக்கான விசாவை நிறுத்தி வைத்துள்ளதாக நேற்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தியதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது.
சவுதியில் உள்ள மக்கா, மதினாவிற்கு செல்லும் பயணிகளின் விசாவை தற்போது தற்காலிகமாக அந்நட்டு அரசாங்கம் தடுத்து நிறுத்தி வைத்து இருக்கிறது. இது தொடர்பான அறிக்கையில், சிறிது காலமாகவே கொரோனா வைரஸ் குறித்த விஷயங்களை கவனித்து வருவதாகவும், கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் பிற நாடுகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில், ஏற்றுக்கொள்ளத் தக்க சர்வதேச நடவடிக்கைகளை தாங்களும் நடமுறைப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது.
மேலும், கொரோனா வைரஸ் அதிகமாகப் பாதித்துள்ள நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கும் சவுதி அரசு தடை விதித்து இருக்கிறது. சவுதி அரேபிய அரசு மக்கா, மதினாவிற்கு செல்பவர்களின் விசாவை நிறுத்தி வைத்திருப்பதால் இந்திய விமான நிலையங்களில் சவுதி செல்பவர்களின் விசா திடீரென ரத்து செய்யப் பட்டது.
மத்திய அரசு திடீரென அனைத்து விமான நிலையங்களுக்கும் தொடர்பு கொண்டு மக்கா, மதினா விற்கு செல்பவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்யுமாறு கேட்டு கொண்டது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் மக்காவிற்கு செல்ல விருந்த 170 பயணிகளின் விசா ரத்தானது. மேலும், மதுரை விமான நிலையத்தில் 66 பயணிகள் தங்களது சொந்த வீடுகளுக்கு திரும்பி அனுப்பப் பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.