பிரிட்டன் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Wednesday,March 11 2020]
சமீபத்தில் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதும்ன் 100க்கும் அதிகமான நாடுகளில் பரவி தினமும் நூற்றுக்கணக்கான உயிர்களை பலிவாங்கி வருகிறது. இந்தியாவிலும் சுமார் 40 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அரசியல்வாதிகளையும் அமைச்சர்களையும் விட்டு வைக்கவில்லை. ஏற்கனவே ஈரான் துணை அதிபர் மற்றும் அமைச்சர் ஆகியோர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது பிரிட்டன் அமைச்சர் ஒருவருக்கும் கொரோனா தாக்கியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் அமைச்சர் நாடின் டோரிஸ் என்பவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 62 வயதான அவர் தற்போது தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது. மேலும் அவரது வீட்டில் உள்ள மற்றவர்களையும் பரிசோதிக்க பிரிட்டன் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
கடந்த 8-ஆம் தேதி, பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்க மகளிர் தின நிகழ்ச்சியில் அமைச்சர் நாடின் டோரிஸ் கலந்து கொண்டதாகவும் அதன்பின்னரே அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளதால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசோதனை செய்ய பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிரிட்டனில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும், 382 நபர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.